Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பிரசவத்தில் இளம் பெண் உயிரிழப்பு; உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு

பிரசவத்தில் இளம் பெண் உயிரிழப்பு; உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு

பிரசவத்தில் இளம் பெண் உயிரிழப்பு; உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு

பிரசவத்தில் இளம் பெண் உயிரிழப்பு; உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு

ADDED : மார் 12, 2025 12:41 AM


Google News
Latest Tamil News
அவிநாசி; அவிநாசி அருகே துலுக்கமுத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்தின் போது, இளம் பெண் உயிரிழந்தார். இதையடுத்து உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்று அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அவிநாசி அருகே பழங்கரை - ஈஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்த டெய்லர் லோகநாதன், 29. அவர் மனைவி ரம்யா, 28. தம்பதிக்கு சிவஸ்ரீ, 8 என்ற மகள் உள்ளார்.இரண்டாவது முறையாக ரம்யா கர்ப்பமுற்றார். துலுக்கமுத்துார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.

வரும், 16ம் தேதி பிரசவம் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக ரம்யா மருத்துவமனை வந்தார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில், ரம்யாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்தின் போது ஏற்பட்ட அதிக ரத்தப் போக்கு மற்றும் உடல் நிலை மோசமடைந்து அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இத்தகவல் அறிந்து அவரது உறவினர்கள் திரண்டனர். சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

'ரம்யாவுக்கு உரிய சிகிச்சை அளிக்காததால், அவரின் உடல் நிலை பாதிக்கப்பட்டு, உயிரிழப்பு ஏற்பட்டது குறித்து உடனடியாகத் தெரிவிக்கவில்லை,' என்று கூறிய அவரின் உறவினர்கள் மருத்துவர்களைக் கண்டித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து, அவிநாசி டி.எஸ்.பி., சிவகுமார், இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் சக்திவேல், துலுக்கமுத்துார் சென்றனர்.

பொதுமக்கள் மற்றும் ரம்யாவின் உறவினர்களிடம் நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடந்தது. அதன்பின், உடலை பிரேத பரிசோதனை செய்து அறிக்கை பெற்று அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்; நிவாரணம் பெறுவது குறித்து முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் பேச்சு நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ரம்யாவின் உடல் ஆம்புலன்ஸில் திருப்பூர் அனுப்பிவைக்கப்பட்டது.

இந்த சம்பவத்தால் இரவு 10.30 மணி வரை பரபரப்பு நிலவியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us