ADDED : ஜூன் 05, 2024 12:44 AM

பல்லடம்:விரைவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், ரோடு விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, பல்லடம் அருகே பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பல்லடம், -மங்கலம் ரோட்டுடன், திருப்பூர் ரோட்டை இணைக்கும் வழித்தடமாக அருள்புரம் ரோடு உள்ளது. பனியன் கம்பெனி வேன்கள், பள்ளி - கல்லுாரி வாகனங்கள் உள்ளிட்டவை, அதிக அளவில் இந்த வழியை பயன்படுத்தி வருகின்றன.
வாகன போக்குவரத்து நிறைந்த இந்த ரோடு, 3.20 கோடி ரூபாய் மதிப்பில், நகராட்சி மூலம் விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது.
வாகன ஓட்டிகள் கூறுகையில், ''குறிப்பாக, தனியார் பள்ளி மற்றும் பனியன் கம்பெனி வாகனங்கள் அதிக அளவில் இந்த ரோட்டை பயன்படுத்துகின்றன. மிகவும் குறுகலாக இருந்த இந்த ரோடு, தற்போது நகராட்சி மூலம் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த பிப்., மாதம் முதல் விரிவாக்கப் பணிகள் துவங்கி நடந்து வருகின்றன. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்புக்கு முன் ரோடு விரிவாக்க பணிகள் நிறைவடையும் என எதிர்பார்த்தோம். இருப்பினும், 50 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளன.
பள்ளிகள் திறப்புக்கு முன் ரோடு விரிவாக்க பணியை விரைந்து முடித்து வாகன ஓட்டிகளின் பயன்பாட்டுக்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.