Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ரூ.1 லட்சம் கோடி வர்த்தக இலக்கு சாத்தியமாக்குமா மத்திய அரசு?

ரூ.1 லட்சம் கோடி வர்த்தக இலக்கு சாத்தியமாக்குமா மத்திய அரசு?

ரூ.1 லட்சம் கோடி வர்த்தக இலக்கு சாத்தியமாக்குமா மத்திய அரசு?

ரூ.1 லட்சம் கோடி வர்த்தக இலக்கு சாத்தியமாக்குமா மத்திய அரசு?

UPDATED : ஜூன் 09, 2024 07:03 AMADDED : ஜூன் 08, 2024 11:52 PM


Google News
Latest Tamil News
திருப்பூர்:திருப்பூர் தொழில்துறையினர், தேசிய பனியன் தொழில் வளர்ச்சி வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை புதிதாக அமைய உள்ள மத்திய அரசுக்கு முன்வைத்துள்ளனர்.

திருப்பூர் உள்நாடு மற்றும் ஏற்றுமதி பின்னலாடைகள், ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் என்ற இலக்கு, பின்னலாடைத்துறையினரின் லட்சியமாக உள்ளது. இதற்கு புதிதாக அமைய உள்ள மத்திய அரசு, தங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் என்று தொழில்துறையினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.

அடுத்தகட்ட வளர்ச்சி


சுப்பிரமணியன், தலைவர், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம்: பின்னலாடை தொழில் அடுத்தகட்டத்துக்கு வளர்ச்சி பெற, பின்னலாடைத்துறை வளர்ச்சி வாரியம் அமைக்க வேண்டும். புதிய தொழில்களை உருவாக்க, பி.எல்.ஐ., -2.0 திட்டத்தை புதிய நிபந்தனையுடன் வடிவமைக்க வேண்டும். 'டப்' திட்டத்துக்கு மாற்று திட்டம் தேவை; ஒட்டுமொத்த பின்னலாடை தொழில் பாதிப்பு குறைய, வங்கதேச ஆடை இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டும்.

பேக்கிங் கிரெடிட் மீதான வட்டி மானியத்தை உயர்த்தி வழங்குவதுடன், பசுமை ஆற்றல் மானியமும் வழங்க வேண்டும். தொழிலாளருக்காக போக்குவரத்து மானிய உதவி, திறன் மேம்பாட்டு திட்டம், வீட்டுவசதி திட்டங்களை அறிவிக்க வேண்டும். செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியை மேம்படுத்த தனி ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும்.

தேவை தீர்வு


ஈஸ்வரன், தலைவர், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா): மத்திய அரசு, ஒட்டுமொத்த ஜவுளித்தொழிலும் சீராக இயங்க, பஞ்சு - நுால் விலையை, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நிர்ணயம் செய்ய வேண்டும். மூலப்பொருட்கள் தடையின்றி கிடைத்தால், பிரச்னையின்றி தொழில் நகரும்; வேலைவாய்ப்பும் கிடைக்கும். உணவுக்கு அடுத்தபடியாக உடை அடிப்படை தேவை; அதன்படி, ஜவுளித்தொழில் சந்திக்கும் பிரச்னைகளை கேட்டறிந்து, சரியான தீர்வு வழங்க வேண்டும்.

தடையின்றி மூலப்பொருள்


முத்துரத்தினம், தலைவர், திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் (டீமா): இந்தியா அனைத்து துறையிலும் வளர்ச்சி பெற்றிருக்கிறது; உலக நாடுகள் மத்தியில் தனி அந்தஸ்து பெற்றுள்ளது. இருப்பினும், ஜவுளித்தொழிலில் மட்டும் சுணக்கம் இருக்கிறது; பாதிப்பு குறித்த விவரம் அரசுக்கு தெரியாததே முக்கியம். புதிதாக அமையும் அரசு, இந்தியாவின் வளர்ச்சியை உறுதி செய்யும். எப்பிரச்னையாக இருந்தாலும், தனி கவனம் செலுத்த வேண்டும்; குறு, சிறு தொழில்கள் வளர்ச்சியால் மட்டுமே பொருளாதாரம் மேம்படும். எனவே, குறு, சிறு தொழில் வளர்ச்சியில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்; வலுவில்லாமல் இருப்பதால், ஜவுளித்துறைக்கென தனி அமைச்சர் வேண்டும். வங்கதேச ஆடை இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டும். மூலப்பொருள், தடையின்றி சீரான விலையில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

45 நாளில் 'பேமென்ட்'


ரத்தினசாமி, தலைவர், பின்னலாடை துணி உற்பத்தியாளர்கள் சங்கம் (நிட்மா): எவ்வித தலையீடுகளையும் ஏற்காமல், குறு, சிறு தொழில்களுக்கான, 45 நாட்கள் 'பேமென்ட்' என்ற திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும். வங்கதேசம் வழியாக சீன ஆடை இறக்குமதியாவதை தடுக்க வேண்டும். தொழில்களுக்கான மின் கட்டணத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். ராகுல் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின், மெட்ரோ ரயில் திட்டம் திருப்பூர் வரை நீட்டிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதன்படி, முதல்கட்ட திட்டத்தை திருப்பூர் வரை நீட்டிக்க வேண்டும்.

நிலுவை மானியம்


ஸ்ரீகாந்த், தலைவர், திருப்பூர் எக்ஸ்போர்ட் நிட் பிரின்டர்ஸ் அசோசியேஷன் (டெக்பா): புதிய தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட நவீன இயந்திரங்களை இறக்குமதி செய்ய, 'ஏ-டப்' திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பின்தேதியிட்டு அறிவித்து, நிலுவை மானியத்தை விடுவிக்க வேண்டும். குறு, சிறு தொழில்களுக்கு, அபரிமிதமான மின் கட்டண உயர்வால் பாதிப்பு அதிகம். 'பீக்ஹவர்' மின் கட்டணம், மின்சார நிலை கட்டண உயர்வை குறைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒட்டுமொத்த பின்னலாடைத் தொழில் பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காண, தேசிய பனியன் தொழில் வளர்ச்சி வாரியம் அமைக்க வேண்டும்.

சீரான விலை


தேவராஜ், பொருளாளர், திருப்பூர் உள்நாட்டு பனியன் ஆடை உற்பத்தியாளர்கள் சங்கம்: குறு, சிறு நிறுவனங்களுக்கான, 45 நாட்கள் 'பேமென்ட்' என்ற திட்டம் சரியானதுதான்; இருப்பினும், நடைமுறை சிக்கல் இருப்பதால், 90 நாட்கள் என்று முதலில் அவகாசம் வழங்க வேண்டும்; பிறகு, 45 நாட்கள் என்று நிர்ணயிக்கலாம். பஞ்சு விலை சீராகவும், பதுக்கல் இல்லாமலும் இருந்தால், ஆண்டு முழுவதும் பஞ்சு நுால் விலை சீராக இருக்கும்.

புதிய ஒப்பந்தம்


கோவிந்தசாமி, தலைவர், திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தி மற்றும் விற்பனையாளர் சங்கம்: விவசாயத்துக்கு அடுத்தபடியாக வேலை வாய்ப்பு வழங்குது ஜவுளித்தொழில். ஒட்டுமொத்த ஜவுளித்தொழில்களும் பயன்பெறும் வகையில், புதிய ஜவுளிக்கொள்கையை அறிவிக்க வேண்டும். ஜவுளித்தொழிலுக்கு தனி வாரியம் அமைய வேண்டும். வங்கதேச ஒப்பந்தத்தை மறுசீராய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரிட்டன், ஐரோப்பாவுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் புதிதாக ஏற்படுத்தி பின்னலாடை ஏற்றுமதி அதிகரிக்க வழிகாட்ட வேண்டும்.

அவசர காலக்கடன்


மணி, தலைவர், திருப்பூர் தொழில் கூட்டமைப்பு: வங்கதேசத்தில் இருந்து ஆடை மட்டுமல்ல, பின் னல் துணியும் இறக்குமதியாவதால், நிட்டிங் தொழில் பாதிக்கிறது; அதை கட்டுப்படுத்த வேண்டும். தொழில்துறையினர், தொழிற்சங்கத்தினர், மத்திய, மாநில அரசுத்துறையினர், அமைச்சர்கள் அடங்கிய கமிட்டி அமைத்து, பிரச்னைகளை உடனுக்குடன் கண்டறிந்து, சரியான தீர்வு காண வழிவகை செய்ய வேண்டும். தொழிற்சாலைகளில், விறகு பயன்பாட்டை தவிர்க்க, 'பைப்லைன்' மூலம் காஸ் வினியோகிக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஒன்றரை ஆண்டுகளாக தொழில்நிலை மோசமாக இருந்ததால், அடுத்தகட்டத்துக்கு தயார்படுத்த, கொரோனா கால உதவி போல, அவசரகால கடன் உதவி வழங்க வேண்டும்.

வட்டிக்குறைப்பு


கோபாலகிருஷ்ணன், தலைவர், திருப்பூர் கம்ப்யூட்டர் எம்பிராய்டர்ஸ் அசோசியேஷன்: மத்திய அரசு புதிய பொலிவுடன் அமைந்துள்ளது; கடந்த சில ஆண்டுகளாக, தொழில்நிலை மோசமாக இருக்கிறது; வங்கி கடன் மீதான வட்டியும் அதிகமாக இருக்கிறது. சிறப்பு திட்டத்தில், வட்டியை குறைக்க வேண்டும். புதிய மெஷின்களை மானியத்தில் வாங்க, 'ஏ-டப்' திட்டத்தை மீண்டும் செயல்படுத்தி, 2022 ஏப்., முதல் பின்தேதியிட்டு மானியத்தை வழங்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us