/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் மத்திய அரசு நிறைவேற்றுமா? விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் மத்திய அரசு நிறைவேற்றுமா?
விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் மத்திய அரசு நிறைவேற்றுமா?
விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் மத்திய அரசு நிறைவேற்றுமா?
விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் மத்திய அரசு நிறைவேற்றுமா?
ADDED : ஜூன் 06, 2024 10:56 PM

பல்லடம்:'அடுத்த ஐந்து ஆண்டுகளில், விவசாயிகளின் கோரிக்கைகளை முழுமையாக மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்' என்று விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கூறினர்.
செல்லமுத்து - மாநில தலைவர், உழவர் உழைப்பாளர் கட்சி: விவசாயிகள் மற்றும் அடித்தட்டு மக்களின் நலன் மீது, புதிய அரசு அக்கறை காட்ட வேண்டும். பயிர் கடன், கல்விக் கடன்களை ரத்து செய்ய வேண்டும். எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைப்படி, விளைபொருட்களுக்கு கட்டுப்படியாகும் விலையை நிர்ணயிக்க வேண்டும்.
பாமாயில் இறக்குமதியை தடை செய்து, உள்ளூர் விவசாயிகளை வாழவைக்கும் வகையில் ரேஷனில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வேண்டும். குண்டாறு - காவிரி, ஆனைமலை - நல்லாறு உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றி நதிகளை தேசிய மயமாக்க வேண்டும். ஆறு சதவீத ஓட்டுகளை இழந்துதான் தி.மு.க, தேர்தலில் வென்றுள்ளது. ஊழல் - போதை ஒழிப்பில் தி.மு க.,வும் கவனம் செலுத்த வேண்டும்.
ஈஸ்வரன் - திருப்பூர் மாவட்ட தலைவர், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்: விவசாயிகள் மட்டுமின்றி எந்த ஒரு நியாயமான போராட்டமாக இருந்தாலும், மத்திய அரசு அதற்கு செவிசாய்க்க வேண்டும். விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம், நதிநீர் இணைப்பு உள்ளிட்ட கடந்த காலத்தில் பா.ஜ., அரசு அறிவித்த கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. கர்நாடகா, கேரளா, ஆந்திர அரசுகள் ஆறுகளின் குறுக்கே அணைகட்ட முயற்சி மேற்கொண்டும் வரும் சூழலில், இதை தடுக்க கடந்த காலங்களில் இருந்த தமிழக எம்.பி.,க்கள் என்ன செய்தார்கள். தி.மு.க., நதிநீர் விஷயத்திலும் அக்கறை காட்ட வேண்டும்.
ஈசன் முருகசாமி - நிறுவனர், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்: விவசாயிகளின் அனைத்து உற்பத்தி பொருட்களுக்கும், எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அறிக்கைபடி, உற்பத்தி செலவுடன், 50 சதவீதம் சேர்த்து விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்யப்படும் என்ற அறிவிப்பு பத்து ஆண்டாக நிறைவேற்றப்படவில்லை. இதற்கு தீர்வு காண வேண்டும். அரசியல் அமைப்பு சட்ட அந்தஸ்துடன் கூடிய விவசாயிகள் பாதுகாப்பு ஆணையம் அமைக்க வேண்டும். சின்ன வெங்காய ஏற்றுமதி வரி நீக்கம், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகம் உள்ளிட்ட கோரிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. வேளாண் காப்பீடு திட்டத்தை விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும்.
இதேபோல், 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தி.மு.க., விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிப்படி, நெல் குவின்டாலுக்கு, 2,500, கரும்பு டன்னுக்கு 4,000 ரூபாய் நிர்ணயிக்க வேண்டும். இனாம் நிலங்களை அனுபவித்து வரும் விவசாயிகள், பொதுமக்களின் நில உரிமையை உறுதி செய்ய வேண்டும். விவசாயத்துக்கு, 24 மணி நேர மும்முனை மின்சாரம், நதிநீர் இணைப்பு, கர்நாடகா, கேரள அரசுகளுடன் பேச்சு நடத்தி நதிநீர் பிரச்னைக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட பல்வேறு கடமைகளை தி.மு.க., அரசு செயல்பட வேண்டும்.