Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'மவுனமே' பதில் என்றால் தீர்வு எப்போது? மனு அளித்த மக்களும், கவுன்சிலரும் கேள்வி

'மவுனமே' பதில் என்றால் தீர்வு எப்போது? மனு அளித்த மக்களும், கவுன்சிலரும் கேள்வி

'மவுனமே' பதில் என்றால் தீர்வு எப்போது? மனு அளித்த மக்களும், கவுன்சிலரும் கேள்வி

'மவுனமே' பதில் என்றால் தீர்வு எப்போது? மனு அளித்த மக்களும், கவுன்சிலரும் கேள்வி

ADDED : ஜூலை 09, 2024 02:20 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்:திருப்பூரில், கலெக்டர் தலைமையில் நடைபெறும் மாவட்ட அளவிலான குறைகேட்பு கூட்டத்தில் அளிக்கப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

தாராபுரம் தாலுகா, சின்னக்காம்பாளையத்தில், தாய் கோழிப்பண்ணை செயல்படுகிறது. குடியிருப்பு அருகே செயல்படும் இந்த பண்ணையால், சுகாதாரம் பாதிக்கப்படுவதாகவும்; கோழிப்பண்ணையை அகற்றக்கோரியும் அப்பகுதி பொதுமக்கள், குறைகேட்பு கூட்டத்தில், கலெக்டரிடமும்; மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகளிடமும் தொடர்ந்து மனு அளித்துவருகின்றனர். வாக்காளர் அட்டை, ஆதார், ரேஷன் கார்டு ஒப்படைக்கும் போராட்டங்களும் நடத்தியுள்ளனர்.

ஆனாலும், கோரிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நேற்றைய குறைகேட்பு கூட்டத்துக்கு, சின்னக்காம்பாளையம் பகுதி மக்கள், கருப்பு நிற பூச்சிகளை பாட்டிலில் அடைத்து எடுத்துவந்து, மனு அளித்தனர்.

அப்பகுதியினர் கூறியதாவது:

கோழிப்பண்ணையிலிருந்து வீசும் துர்நாற்றத்தால், பெரியவர்கள், குழந்தைகளுக்கு மூச்சுத்திறணல் உள்ளிட்ட சுவாச கோளாறுகள் ஏற்படுகின்றன. கோழிப்பண்ணையிலிருந்து கறுப்பு நிற பூச்சிகள் ஆயிரக்கணக்கில் உருவாகி, குடியிருப்புக்குள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்த பூச்சிகள் உடலில் பட்டாலே, அரிப்பு ஏற்படுத்துகிறது. வீட்டினுள் உணவுப்பொருட்கள், தண்ணீரிலும் விழுகின்றன.

சோளம், கத்தரி, தக்காளி, வாழை, மல்பெரி, கீரை உள்ளிட்ட பயிர்களை, இவை சேதப்படுத்துகின்றன. கோவிந்தாபுரம் பகுதிகளிலும் கோழிப்பண்ணைகள் இயங்குவதால், சுற்றியுள்ள 15 கிராமங்களுக்கு இந்த பூச்சிகள் பரவி பாதிப்பு ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. கோழிப்பண்ணை உரிமத்தை ரத்து செய்து, மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மதுக்கடை விவகாரம்

திருப்பூர் மாநகராட்சி 11 வது வார்டு கவுன்சிலர் (இ.கம்யூ.,) செல்வராஜ், நீண்ட காலமாக தான் அளித்துவரும் மனு மீது மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காதது குறித்து கூறியதாவது:

திருப்பூர் - அவிநாசி ரோடு, திலகர் நகரில், 2 'டாஸ்மாக்' மதுக்கடை, வேலம்பாளையம் - பூலுவப்பட்டி ரோட்டில் ஒரு டாஸ்மாக் மதுக்கடை செயல்படுகின்றன. இம்மூன்று மதுக்கடைகளிலும், விதிமுறைகளை மீறி, 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுகிறது.

தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல், மதுக்கடையே 'கதி' என்றே கிடக்கின்றர். இதனால், தொழிலாளர் குடும்பம், குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.கவுன்சிலரானது முதலே (2021 ம் ஆண்டு), மதுக்கடைகளின் விதிமீறல் தொடர்பாக மனு அளித்து வருகிறேன்.

ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கூலி தொழிலாளர் மற்றும் அவர்களது குடும்ப பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மதுக்கடைகளை குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இதே கோரிக்கையை இன்றைய (நேற்று) குறைகேட்பு கூட்டத்திலும் மனுவாக அளித்துள்ளேன். இம்முறையாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கிறார்களா, இல்லை வழக்கம்போல் மவுனமா என்று பார்ப்போம்.

இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us