/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாற்றுத்திறனாளிக்கு என்னென்ன திட்டங்கள்! மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு மாற்றுத்திறனாளிக்கு என்னென்ன திட்டங்கள்! மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு
மாற்றுத்திறனாளிக்கு என்னென்ன திட்டங்கள்! மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு
மாற்றுத்திறனாளிக்கு என்னென்ன திட்டங்கள்! மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு
மாற்றுத்திறனாளிக்கு என்னென்ன திட்டங்கள்! மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு
ADDED : மார் 14, 2025 12:45 AM

திருப்பூர்; மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் குறித்து, திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நேற்று துவங்கியது.
கலெக்டர் அலுவலக வளாகத்தில், கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கிய நிகழ்ச்சியை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த ராம் குமார் துவக்கிவைத்தார். முதல்நாளான நேற்று, திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட், புஷ்பா தியேட்டர் ரவுண்டானா, அவிநாசி பகுதிகளில், மாற்றுத்திறனாளிகளுக்காக அரசு செயல்படுத்திவரும் திட்டங்கள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முழு விவரங்கள் அடங்கிய கையேடு வினியோகிக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசின் தனித்துவமான தேசிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. வங்கி கடனுக்கு அதிகபட்சம், 25 ஆயிரம் ரூபாய் வரை மானியம், ஆவின் பாலகம் அமைக்க, 50 ஆயிரம் ரூபாய் மானியம், பிரதமரின் சுய வேலைவாய்ப்பு திட்டத்தில், 5 சதவீதம் தனிநபர் பங்கு தொகை வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளியின் திருமணத்துக்கு, 25 ஆயிரம் ரூபாய், 8 கிராம் தங்கம், பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு படித்த மாற்றுத்திறனாளியின் திருமணத்துக்கு, 50 ஆயிரம் ரூபாய், 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. பார்வையற்றோர் மாவட்டம் முழுவதும் பயணிக்க பஸ் பாஸ்.
கல்வி உதவித்தொகை
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு, கல்வி உதவித்தொகை, மனவளர்ச்சி குன்றிய, தசை சிதைவு நோய் பாதித்த, தொழு நோய், முதுகு தண்டுவடம் மற்றும் பார்கின்ஸ் நோய் பாதித்த, புற உலக சிந்தனையற்ற, 75 சதவீதத்துக்கு மேல் கை கால் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு, பராமரிப்பாளர் உதவித்தொகை மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
இதுதவிர, சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், சிறப்பு சக்கர நாற்காலி, பிளாஸ்டிக் முட நீக்கியல் சாதனம், பேட்டரி வீல் சேர், இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர், செயற்கை கை, கால், ஊன்றுகோல், பிரெய்லி கடிகாரம், நடை பயிற்சி கருவி, மோட்டார் பொருத்திய தையல் மெஷின், காதொலி கருவி, பார்வையற்றோர் மற்றும் செவித்திறன் குறைபாடுள்ளோருக்கு மொபைல் போன் என, ஏராளமான நலத்திட்ட உதவிகள் மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்படுத்தப்படுகிறது.