/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தண்ணீர்... தண்ணீர்... போராட்ட களமான ஒன்றியம் குடிநீர் திட்டத்தில் தொடர் குளறுபடி தண்ணீர்... தண்ணீர்... போராட்ட களமான ஒன்றியம் குடிநீர் திட்டத்தில் தொடர் குளறுபடி
தண்ணீர்... தண்ணீர்... போராட்ட களமான ஒன்றியம் குடிநீர் திட்டத்தில் தொடர் குளறுபடி
தண்ணீர்... தண்ணீர்... போராட்ட களமான ஒன்றியம் குடிநீர் திட்டத்தில் தொடர் குளறுபடி
தண்ணீர்... தண்ணீர்... போராட்ட களமான ஒன்றியம் குடிநீர் திட்டத்தில் தொடர் குளறுபடி
ADDED : ஜூலை 27, 2024 12:30 AM
உடுமலை;குடிமங்கலம் ஒன்றிய கிராமங்கள், குடிநீர் பிரச்னைக்காக போராட்ட களமாக மாறியுள்ள நிலையில், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மவுனம் சாதிப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, 23 ஊராட்சிகளின் குடிநீர் தேவைக்காக, கடந்த 2015ல், 54.14 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2017ல், திட்டம் பயன்பாட்டுக்கு வந்தது. இத்திட்டத்தில், உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட, 3 ஊராட்சிகளும் பயன்பெற்று வருகின்றன.
நீண்ட காலமாக நீடித்த குடிநீர் பிரச்னைக்கு இத்திட்டம், முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்த்திருந்த மக்களுக்கு, தற்போது ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
கடந்த சில மாதங்களாக, குடிநீர் திட்டத்தில் நிலவும் குளறுபடிகளால், 25க்கும் அதிகமான கிராமங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
காலிக்குடங்களுடன் மக்கள்
கூட்டுக்குடிநீர் திட்டத்தில், பற்றாக்குறை வினியோகம் காரணமாக, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது; போதிய மழை இல்லாததால், போர்வெல்களிலும், நீர்மட்டம் குறைந்து, உவர்ப்பு தண்ணீரும் வினியோகிக்கப்படவில்லை.
இதனால், பாதிக்கப்பட்ட மக்கள், தொடர் போராட்டத்தில் ஈடுபட துவங்கினர். முதற்கட்டமாக மூங்கில்தொழுவு கிராம மக்கள் பெதப்பம்பட்டி நால்ரோட்டில், சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து விருகல்பட்டி கிராம மக்கள், ஒன்றிய மற்றும் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். பெரியபட்டி ஊராட்சி மக்கள், ஒன்றிய அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொண்டம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மக்கள், காலிக்குடங்களுடன் பல்லடம் மாநில நெடுஞ்சாலையில், சாலை மறியலில் ஈடுபட்டனர். அடுத்ததாக புதுப்பாளையம் ஊராட்சி மக்கள் போராட்டத்தில் ஈடுபட தயாராகி வருகின்றனர்.
நிர்வாக குளறுபடியா?
திருமூர்த்தி கூட்டுக்குடிநீர் திட்டத்தை பராமரித்து வரும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், மக்களின் தொடர் போராட்டங்களுக்கு பிறகும் மவுனம் சாதித்து வருகின்றனர்.
சாலை மறியல் நடக்கும் போது, கிராமத்துக்கு வரும் தண்ணீர், பிற நாட்களில் எங்கே செல்கிறது என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது.
பராமரிப்பு மற்றும் வினியோக பணியிலுள்ள தற்காலிக பணியாளர்களும், பராமரிப்பு பணிகளை டெண்டர் எடுத்துள்ள ஒப்பந்ததாரரின் தாமதமான பணிகளுமே ஒட்டுமொத்த பிரச்னைக்கு காரணம் என, குடிமங்கலம் ஒன்றியத்தை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், ஒன்றிய அதிகாரிகள் முதல் தமிழக முதல்வர் வரை மனு அனுப்பியும் பலனில்லை. ஊராட்சிதோறும், குடிநீர் அளவீட்டுக்கான மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது.
ஆனால், 'நிர்ணயிக்கப்பட்ட அளவு குடிநீர் வருவதில்லை; கட்டணத்தை மட்டும் முழுமையாக செலுத்துகிறோம்,' என ஊராட்சி நிர்வாகத்தினரும், 'குடிநீர் வடிகால் வாரியத்தினருடன் ஆலோசனை கூட்டம் நடத்தினாலும், எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை,' என ஒன்றிய அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர்.
முழு ஆய்வு தேவை
கூட்டுக்குடிநீர் திட்டத்தின் வழியோரத்தில், கூடுதலாக தண்ணீர் எடுப்பது முக்கிய பிரச்னையாக உள்ளது. மேலும், 'கவனிப்பு' அடிப்படையில், இரவு நேரங்களில், கூடுதலாக தண்ணீர் திறப்பது என தொடர் புகார் தெரிவிக்கப்படுகிறது.
குடிநீர் வடிகால் வாரியத்தினர், திட்ட வடிவமைப்பு மற்றும் நிர்ணயித்த அளவு குடிநீர் வினியோகம் குறித்து, திருமூர்த்தி அணை முதல் கடைக்கோடி கிராமம் வரை ஆய்வு செய்ய வேண்டும்.
விதிமீறல்களை கண்டறிந்து பாரபட்சம் இல்லாமல், நடவடிக்கை எடுக்க வேண்டும்; மாவட்ட நிர்வாகம் வழிகாட்டுதல் பெற்று, போலீஸ் பாதுகாப்புடன் இப்பணிகளை மேற்கொண்டால் மட்டுமே, குடிநீருக்காக குடிமங்கலம் ஒன்றிய கிராம மக்கள் காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபடுவது தவிர்க்கப்படும்.
இது குறித்து, மாதந்தோறும் அனைத்துத்துறை ஆலோசனை கூட்டம் நடத்தும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனும், கவனம் செலுத்த வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.