ADDED : ஜூன் 24, 2024 01:31 AM

திருப்பூர்;குடிநீர் குழாயில்தானே தண்ணீர் கொட்ட வேண்டும்; ஆனால், திடீரென குழாய் உடைப்பு ஏற்பட்டு, சிற்றோடை போல் ஆண்டிபாளையம் குளத்துக்குள் தண்ணீர் ஓடியதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
திருப்பூர் -- மங்கலம் ரோட்டில், மாநகராட்சி எல்லையில், பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. ஆண்டிபாளையம் குளம் அருகே அமைந்துள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு, பெரிய குழாய் பதிக்கும் பணி, இரவு பகலாக நடந்து வருகிறது.
இதனால், மங்கலம் ஊராட்சிக்கு செல்லும் பிரதான குடிநீர் குழாய்களும், மாநகராட்சி குடிநீர் குழாய்களும் தினமும் உடைகிறது. பணியாளர்கள், உடனுக்குடன் குழாய் உடைப்பை சீராக்கி பணியை தொடர்கின்றனர்.
ஆண்டிபாளையம் குளம் அருகே, நேற்று திடீரென குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மங்கலம் ஊராட்சிக்கு செல்லும் பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பால், தண்ணீர் அதிக அளவு வெளியேறி, ரோட்டில் சிற்றோடை போல் பாய்ந்தது; ஆண்டிபாளையம் பஸ் ஸ்டாப் அருகே, குழாய் இருப்பதால், அவ்வழியாக குளத்துக்குள் சென்றது. போக்குவரத்து பாதிப்பு தவிர்க்கப்பட்டது.
பணிகள் எதுவும் நடக்காமல், திடீரென குழாய் உடைப்பு ஏற்பட்டதால், குடிநீர் அதிக அளவு வெளியேறியதால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மாநகராட்சிக்கு தகவல் கொடுத்ததால், ஒரு மணி நேரத்துக்கு பிறகு தண்ணீர் நிறுத்தப்பட்டது.