Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஆங்கிலேயரை அலறவிட்ட கும்மிப்பாடல்.

ஆங்கிலேயரை அலறவிட்ட கும்மிப்பாடல்.

ஆங்கிலேயரை அலறவிட்ட கும்மிப்பாடல்.

ஆங்கிலேயரை அலறவிட்ட கும்மிப்பாடல்.

ADDED : ஆக 03, 2024 06:09 AM


Google News
Latest Tamil News
'பூனைக் குலமென வெள்ளைப்படையோடப்

பூரித்து வீரப் புலி போலச்

சேனைக் கதிபதி சின்னமலை

வரும் தீரத்தை வந்துமே பாருங்கடி' என்கிறது ஒரு கும்மிப்பாடல்.

இன்று, சுதந்திரப் போராட்ட வீரர், தீரன் சின்னமலையின் நினைவு நாள். தீரன் சின்னமலையின் சொந்த ஊர், காங்கயம் அடுத்த மேலப்பாளையம் கிராமம். சிலம்பாட்டம், தடி வரிசை, மல்யுத்தம், வில் வித்தை, வாள்வீச்சு என வீர விளையாட்டுகளில் நிபுணத்துவம் பெற்றவராகத் திகழ்ந்தார். அவரது வீரமும், நேர்மையும், அவரது திறனை கொங்கு மண்டலம் முழுக்க அறியச் செய்தது; ஒரு கட்டத்தில் நம் நாட்டை அடிமைப்படுத்தி ஆண்டுகொண்டிருந்த ஆங்கிலேயரையே அதிரச் செய்தது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை கடுமையாக எதிர்த்த தீரன் சின்னமலை, மைசூரை ஆண்ட திப்பு சுல்தானிடம் நன்மதிப்பு பெற்றிருந்தார். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை வேர் அறுக்க, திப்பு படையினருடன் கை கோர்த்தார். போர் பயிற்சி பெற்றிருந்த கொங்கு மண்டல இளைஞர் படையுடன், மைசூரு விரைந்தார் தீரன் சின்னமலை. மைசூரு போர்களில் ஆங்கிலேயரை திப்பு சுல்தானின் படையினர் திணறடித்து வெற்றி வாகை சூடியதில் சின்னமலையின் கொங்கு படைக்கு முக்கிய பங்குண்டு என்பது வரலாறு.

மாணவர்கள் வரலாறு

அறிய வேண்டும்

ஆங்கிலேயருக்கு எதிராக தீரன் சின்னமலையின் படை எதிர்கொண்ட அனைத்து போர்களிலும் வெற்றியே கிடைத்திருக்கிறது. ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை நினைவிடத்தை கல்வி சுற்றுலா தலமாக மாற்றி, மாணவ, மாணவியருக்கு தீரன் சின்னமலையின் வீரம், அவரது வரலாற்றை விளக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் அவருக்கான முக்கியத்துவத்தை அதிகப்படுத்த வேண்டும். திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்ட், டவுன்ஹால் கட்டடம், கோவை விமான நிலையத்துக்கு அவரது பெயர் சூட்ட வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

- பெஸ்ட் ராமசாமி, நிறுவன தலைவர், கொங்குநாடு முன்னேற்ற கழகம்

--------------

அரசு முக்கியத்துவம்

தருவது அவசியம்

தீரன் சின்னமலை படையில் அனைத்து சமுதாய மக்களும் இணைந்து, நாட்டின் சுதந்திரத்திற்காக பல்வேறு தியாகங்களை செய்துள்ளனர். முதல்வராக ஜெயலலிதா இருந்த போது, அவரது நினைவு நாளில், ஓடாநிலையில் உள்ள அவரது நினைவிடத்தில் நடக்கும் அரசு விழாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். சங்க நிர்வாகிகளுக்கு அழைப்பிதழ் அனுப்பப்படும். தற்போது, அத்தகைய முக்கியத்துவம் குறைந்திருப்பதாக உணர்கிறோம். தீரன் சின்னமலை சுதந்திர போராட்ட தியாகி என்பது, நிரந்தர அரசாணையாக்கப்பட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் அவருக்கான முக்கியத்துவத்தை அதிகப்படுத்த வேண்டும்.

- ராஜாமணி, மாநில பொதுச்செயலாளர்,

கொங்கு நாடு விவசாயிகள் கட்சி

------

கொங்கு சமுதாயத்தின்

சீரிய அடையாளம்

நாட்டின் சுதந்திர போராட்டத்தில் முழு ஈடுபாடுடன் பங்கேற்ற அவரது வீரம், கொங்கு சமுதாயத்தின் சீரிய அடையாளமாக இருக்கிறது; பல்வேறு தியாகங்களை செய்துள்ளார். கொங்கு மண்டலம் முழுக்க பரவியுள்ள அவரது புகழை அங்கீகரிக்கும் விதமாக, திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்ட், கோவை விமான நிலையத்துக்கு அவரது பெயர் சூட்ட வேண்டும்.

- ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர், கொ.ம.தே.க.,





      Our Apps Available On




      Dinamalar

      Follow us