Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சுழல் மாறும் அரசியல் சூழல்! திருப்பூர் தொகுதி தேர்தல் முடிவு: வெளிச்சத்துக்கு வந்த நிஜங்கள்

சுழல் மாறும் அரசியல் சூழல்! திருப்பூர் தொகுதி தேர்தல் முடிவு: வெளிச்சத்துக்கு வந்த நிஜங்கள்

சுழல் மாறும் அரசியல் சூழல்! திருப்பூர் தொகுதி தேர்தல் முடிவு: வெளிச்சத்துக்கு வந்த நிஜங்கள்

சுழல் மாறும் அரசியல் சூழல்! திருப்பூர் தொகுதி தேர்தல் முடிவு: வெளிச்சத்துக்கு வந்த நிஜங்கள்

ADDED : ஜூன் 06, 2024 06:36 AM


Google News
Latest Tamil News
திருப்பூர் : லோக்சபா தேர்தலில், திருப்பூர் தொகுதி மீண்டும் தி.மு.க., கூட்டணி வசமே வந்தது. 'இத்தேர்தலில், வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள், வரும் காலகட்டங்களில், அரசியல் மாற்றத்துக்கு வித்திடும் வகையில் அமைந்திருக்கிறது' என்பதே அரசியல் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

இயல்பு குறைந்த வெற்றி


திருப்பூர் லோக்சபா தொகுதிக்குள், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருப்பூர் வடக்கு, தெற்கு சட்டசபை தொகுதிகள்; ஈரோடு மாவட்டம் பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி சட்டசபை தொகுதிகள் உள்ளன.

இம்முறை, தி.மு.க.., கூட்டணியில், இந்திய கம்யூ., சார்பில் மீண்டும் சுப்பராயன் போட்டியிட்டார். இம்முறை அவர், 4.72 லட்சம் ஓட்டுகளை பெற்றார்; இது, 41.38 சதவீதம். கடந்த, 2019 தேர்தலில், 5.08 லட்சம் ஓட்டுகளை பெற்றார். இது, 45.44 சதவீதம். தொகுதிக்கு பழையவர், அனுபவஸ்தர் என்ற அடையாளத்தை சுப்பராயன் பெற்றிருப்பினும், கடந்த தேர்தலை விட கூடுதல் ஓட்டு பெற இயலவில்லை.

அ.தி.மு.க., வேட்பாளர் அருணாச்சலம், 3.46 லட்சம் ஓட்டுகளை பெற்றார்; இது, 30.35 சதவீதம். கடந்த, 2019ல், அ.தி.மு.க., வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ஆனந்தன், 4.15 லட்சம் ஓட்டுகளை பெற்றிருக்கிறார்; இது, 37.10 சதவீதம். இம்முறை களத்தில் நின்ற அருணாசலம், தொகுதிக்கு புதியவர் என்பதும், கூட்டணி பலம் இல்லாமல், அக்கட்சி தேர்தல் களம் கண்டதும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.

பாய்ச்சலில் பா.ஜ., - நாம் தமிழர்


தி.மு.க., - அ.தி.மு.க., சார்ந்தே, திருப்பூர் தொகுதி அரசியல் களம் சுழன்று வந்த நிலையில் இம்முறை பா.ஜ., - நாம் தமிழர் கட்சிகள் பெற்ற ஓட்டுகள், பிற கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.பா.ஜ., சார்பில் அக்கட்சியின் மாநில பொது செயலர் முருகானந்தம் போட்டியிட்டார்; வி.ஐ.பி., வேட்பாளர் என்ற போதிலும், தொகுதிக்கு புதியவர்; அதை புரிந்து, சுழன்று, சுழன்று ஓட்டு வேட்டையாடினார். அதன் விளைவாக, 1.85 லட்சம் ஓட்டுகளை பெற்றார். இது, 16.22 சதவீதம்.அதே போன்று, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக களமிறங்கிய சீதாலட்சுமி, 95,726 ஓட்டுகளை பெற்றார். இது, 8.38 சதவீதம். கடந்த, 2019 தேர்தலில் இக்கட்சிக்கு, 42,189 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தது; இது, 3.77 சதவீதம் மட்டுமே.

ம.நீ.ம., ஓட்டு மாயமானதா?


அரசியல் ஆர்வலர்கள் கூறியதாவது: தி.மு.க., - அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் அசைக்க முடியாத 'ஓட்டு வங்கி'களின் ஓட்டுகள் தான், அக்கட்சியின் ஓட்டு சதவீதத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன. மாறாக, புதிய வாக்காளர்கள் அவர்களுக்கு ஆதரவளித்ததாக தெரியவில்லை. இந்திய கம்யூ., வேட்பாளரின் வெற்றிக்காக, தி.மு.க.,வினர் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டதாக பா.ஜ., உள்ளிட்ட கட்சியினர் குற்றஞ்சாட்டிவந்தனர். அந்த அடிப்படையிலும் ஓரளவு ஓட்டுகள் அக்கட்சிக்கு விழுந்துள்ளன.

தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வில் அதிருப்தியில் உள்ள கட்சியினர்; இரு கட்சிகளையும் விரும்பாத வாக்காளர்கள், புதிய மற்றும் இளம் வாக்காளர்கள், மாற்று அரசியலை விரும்பி பா.ஜ., மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டளித்துள்ளனர். மக்கள் நீதி மய்யம் கடந்த முறை லோக்சபா தேர்தலில் 64, 657 ஓட்டுகளைப் (5.78 சதவீதம்) பெற்றது. மூன்றாவது இடம் பெற்றிருந்தது. ம.நீ.ம., ஓட்டுகள் சேர்ந்திருந்தால், சுப்பராயன் கூடுதல் ஓட்டுகளைப் பெற்றிருக்க வேண்டும். இந்த ஓட்டுகள் பல்வேறு வகையில் பிரிந்ததாகத்தான் தெரிகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சின்னத்துக்காக ஓட்டா?


'சின்னம் பார்த்து ஓட்டளிப்பது' என்ற மனநிலையில் இருந்து வாக்காளர்கள் மாறத் துவங்கியுள்ளனர் என்பதற்கு நாம் தமிழர் கட்சி ஓர் உதாரணம். தேர்தல் களத்தில் வாக்காளர்களுக்கு பழக்கப்பட்ட 'கரும்பு விவசாயி' சின்னம் இல்லாமல், 'மைக்' சின்னத்தில் அவர்கள் போட்டியிட்டனர். மிகக்குறுகிய நாட்களில் அச்சின்னத்தை வாக்காளர்கள் மனதில் பதிய வைத்து, ஒரு லட்சம் ஓட்டுகள் வரை அக்கட்சி பெற்றிருப்பதை, எளிதாக கடந்து போக முடியாது. இந்த தேர்தல் முடிவு, வாக்காளர்களின் மாற்றத்தை நோக்கிய ஒரு பயணத்துக்கு முதற்படி என்றும் சொல்லலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

அ.தி.மு.க.,வில் 'உள்ளடி வேலை'


அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:இந்த தேர்தலில், அ.தி.மு.க.,வின் ஓட்டுகள் பெருமளவில் பா.ஜ., கட்சிக்கு விழுந்திருக்கிறது. அ.தி.மு.க., நிர்வாகிகள் மட்டத்தில் தற்போது மறைமுக 'அதிகார போர்' நடந்து வருகிறது. அ.தி.மு.க.,வின் செல்வாக்கு பெற்ற தொகுதிகளிலேயே அக்கட்சிக்கான ஓட்டு குறைந்திருப்பது, சந்தேகத்தை வலுப்படுத்தியிருக்கிறது.
அ.தி.மு.க.,வுக்கு செல்வாக்குள்ள பெருந்துறை தொகுதியில், இந்திய கம்யூ.,வுக்கு, 75,437 ஓட்டு, அ.தி.மு.க.,வுக்கு, 61,927 ஓட்டுகள் கிடைத்துள்ளது. பவானி தொகுதியில், இ.கம்யூ.,வுக்கு, 69,541 ஓட்டு, அ.தி.மு.க.,வுக்கு, 68,686 ஓட்டு கிடைத்துள்ளது. இரு தொகுதிகளிலும் ஓட்டு வித்தியாசம் குறைவு தான். அதே நேரம், கோபியில், இ.கம்யூ.,வுக்கு, 86,471 ஓட்டு, அ.தி.மு.க.,வுக்கு, 62,908 ஓட்டுகள் கிடைத்துள்ளன; ஓட்டு வித்தியாசம், 23,563. அந்த வகையில் அ.தி.மு.க.,வுக்கு செல்வாக்குள்ள தொகுதிகளில் தென்படும் பெருமளவு ஓட்டு வித்தியாசம், கட்சிக்குள் ஏதேனும் உள்ளடி வேலை நடந்ததா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.



5 லட்சம் வாக்காளர் நிலை என்ன?


திருப்பூர் தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை, 16 லட்சம் என்பது தேர்தல் ஆணையத்தின் கணக்கு; இதில், 11 லட்சம் ஓட்டுகளே பதிவாகியுள்ளன. 5 லட்சம் வாக்காளர்களின் நிலைபாடு என்ன என்பது கேள்விக்குறி. வாக்காளர் பட்டியலில், இரட்டை பதிவு, இறந்தவர் பெயர் நீக்காதது போன்ற குளறுபடிகள் நீக்கப்பட்டு, பட்டியலில் நுாறு சதவீத துல்லியத்தன்மையை கொண்டு வர வேண்டும். 5 லட்சம் வாக்காளர்கள் ஏன் வாக்களிக்கவில்லை என்பதை கண்டறிய வேண்டும். அப்போது தான், கட்சிகளுக்கான செல்வாக்கை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.---



திருப்பூர் லோக்சபா தொகுதி

வேட்பாளர் ஓட்டு சதவீதம்சுப்பராயன் (இந்திய கம்யூ.,) 41.38 சதவீதம்அருணாச்சலம்(அ.தி.மு.க.,) 30.35 சதவீதம்முருகானந்தம்(பா.ஜ.,) 16.22 சதவீதம்சீதாலட்சுமி(நாம் தமிழர்) 8.38 சதவீதம்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us