ADDED : ஜூலை 08, 2024 10:47 PM

கறவை மாடு வளர்ப்பு பயிற்சி
திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் உள்ள கால்நடை பல்கலை கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், கறவை மாடு வளர்ப்பு தொடர்பான, உள்வளாக பயிற்சி வழங்கப்பட உள்ளது. நாளை, (10ம் தேதி) காலை, 10:00 மணிக்கு வழங்கப்படும் பயிற்சியில் விவசாயிகள் பங்கேற்று, கறவை மாடு வளர்ப்பு குறித்தான சந்தேகங்களுக்கு தெளிவு பெறலாம். விபரங்களுக்கு, 0421-2248524 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, ஆராய்ச்சி மைய தலைவர் மதிவாணன் தெரிவித்தார்.
மரத்துக்கு தீ வைத்த கொடுமை (படம்)
பி.ஏ.பி.,வாய்க்காலில் ஆயிரக்கணக்கான மரங்கள் தன்னிச்சையாக வளர்ந்துள்ளன. பறவைகளின் வாழ்விடமாக உள்ளது. மரங்களின் வேர்ப்பகுதியில் சிலர் தீயிட்டு கொளுத்தி வருகின்றனர். தீயில் வெந்த மரம் உடனடியாக தன் பலத்தை இழந்து கீழே சரிகிறது. இவற்றை தடுத்து, மரங்களைக் காப்பாற்ற வேண்டிய அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர். மரப்படுகொலை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்
கல்லுாரியில் கருத்தரங்கம்
திருப்பூர் எல்.ஆர்.ஜி., அரசு கலைக் கல்லுாரியில், வரும், 11, 12ம் தேதி 'மத்திய அரசின் நேனோ பொருட்கள் -2024' எனும் தலைப்பில், இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம் நடக்கிறது. சென்னை, மும்பை, ைஹதராபாத் உள்ளிட்ட இடங்களில் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களில் பணிபுரியும் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் பங்கேற்கின்றனர். பங்கேற்க விரும்புவோர், https://www.ncn2024.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என, இயற்பியல் துறை பேராசிரியர் கிங்சன் சாலமன் ஜீவராஜ் தெரிவித்தார்.
---
புதிய பேட்டரி வாகனங்கள் (படம்)
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் குப்பை சேகரித்து அகற்றும் பணிக்கு புதிய பேட்டரி வாகனங்கள் தருவிக்கப்பட்டுள்ளன. அவ்வகையில், நேற்று 2வது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் துாய்மைப்பணிக்கு பயன்படுத்தும் 10 பேட்டரி ஆட்டோக்கள் இயக்கம் நேற்று துவக்கி வைக்கப்பட்டது. மேயர் தினேஷ்குமார் துவக்கி வைத்தார். துணை மேயர் பாலசுப்ரமணியம், கமிஷனர் பவன்குமார் முன்னிலை வகித்தனர். துணை கமிஷனர் சுல்தானா, உதவி கமிஷனர் வினோத், நகர் நலஅலுவலர் கவுரி சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மின்நுகர்வோர் குறைகேட்பு
சோமனுார் கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், நாளை (10 ம் தேதி ) நடக்கிறது. இது குறித்து, செயற்பொறியாளர் சபரிராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,''சோமனுார் கோட்ட அளவிலான, மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், நாளை (10 ம் தேதி) காலை, 11:00 மணிக்கு, சோமனுார் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்க உள்ளது. மின்நுகர்வோர் பங்கேற்று, தங்களது குறைபாடுகளை தெரிவித்து தீர்வு பெறலாம்,'' என்று தெரிவித்துள்ளார்.
---
கல்லுாரி ஆண்டு விழா
அவிநாசி அருகேயுள்ள தேவராயன்பாளையம், ஜாமிஆ ஆயிஷத்துத் துஹ்ரா பெண்கள் ஷரீஅத் கல்லுாரியின் இரண்டாமாண்டு விழா நடந்தது. கல்லுாரியில் நடந்த விழாவில், அவிநாசி மதரசா பேராசிரியர் மவுலவி சித்தீக் அலி ஹஸனி தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் மவுலவி இம்ரான் ஹசனி முன்னிலை வகித்தார். போட்டிகளில் வெற்றி மற்றும் சிறப்பிடம் பெற்ற மாணவியருக்கு பரிசளிக்கப்பட்டது. கல்லுாரி பேராசிரியர்கள், மாணவியர், பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
---
மா.கம்யூ., ஆர்ப்பாட்டம் (படம்)
வேலை உறுதித்திட்ட தொழிலாளருக்கு மூன்று மாதமாக வேலை வழங்காததைக் கண்டித்து அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்,, மா.கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து, பி.டி.ஓ., விஜயகுமாரிடம் (கிராமம்) மனு அளித்தனர். முன்னதாக ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட குழு உறுப்பினர் பழனிசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.