சாக்கடை கால்வாய் பணி கிடப்பில்...
சாக்கடை கால்வாய் பணி கிடப்பில்...
சாக்கடை கால்வாய் பணி கிடப்பில்...
ADDED : ஜூன் 01, 2024 12:14 AM

திருப்பூர்;ரிங்ரோட்டில் சாக்கடை கால்வாய் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால், விபத்து அபாயம் தொடர்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, 2001-06ம் ஆண்டில், ரிங்ரோடு அமைக்கப்பட்டது. அதற்கு பிறகு, இரண்டு முறை அகலப் படுத்தப்பட்டது. தற்போது, ரிங் ரோட்டை மேம்படுத்தும் வகையில், ரோட்டின் இருபுறமும் சாக்கடை கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது.
சந்திராபுரத்தில் இருந்து ரோட்டின் வடபுறமாக, செவந்தாம்பாளையம் வரை பணிகள் நடந்து வருகிறது. சந்திராபுரம் கடைசியில், மின் கம்பங்கள் இடையூறாக இருந்ததால், அப்பகுதியில் சாக்கடை கால்வாய் இணைப்பு பணி கிடப்பில் போடப்பட்டது.
இரண்டு புறமும் கட்டிய கால்வாய்கள் அப்பகுதியில் அதேநிலையில் போட்டு வைக்கப்பட்டுள்ளது. குழி தோண்டிய மண் ரோட்டோரமாக குவித்து வைக்கப்பட்டதால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
மின்வாரியம், மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலில், மின் கம்பங்களை இடமாற்றம் செய்து, சாக்கடை கால்வாய் பணியை போர்க்கால அடிப்படையில் முடித்து, ரோட்டையும் சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.