ADDED : ஜூன் 17, 2024 12:16 AM

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் பல்வேறு பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஜம்மனை ஓடையில் கரைகளை பலப்படுத்தி, கரையோரத்தில் ரோடு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அவ்வகையில், ஜம்மனை ஓடையின் கரையில் தடுப்பு சுவர் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சூரியன் நகர் பகுதியில், பணிகள் நடக்கிறது. இப்பகுதியில் ஒரு சில வீதிகளிலிருந்து வரும் கழிவு நீர் வடிகால்கள் இந்த ஓடையில் சென்று கலந்து பாய்கிறது. தற்போது தடுப்பச்சுவர் கட்டும் பணி நடக்கும் இடத்தில் சேகரமாகும் கழிவு நீர் கட்டுமானம் நடைபெறும் இடத்தில் பெருமளவு சென்று தேங்கி நிற்கிறது.
இதனால், தடுப்புசுவர் கட்டுமானப் பணியில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சுவர் கட்டும் பகுதியில் கழிவு நீர் தேங்குவதால், கட்டுமானம் பலவீனமடையும் அபாயமும் உள்ளது. கழிவு நீர் தேங்காத வகையில் அதை அப்புறப்படுத்தி கட்டுமானப் பணியைத் தொடர வேண்டும்.