
நிற்காத ரயில்கள்
பின்னலாடை ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தில் கோலோச்சும் திருப்பூரில், ரயில்வே உள்கட்டமைப்பு வசதி போதுமானதாக இல்லை. தேவையான ஊர்களுக்குப் போதுமான ரயில்கள் இல்லாத நிலை நீடிக்கிறது.
பெங்களூருக்கு ரயில்
பொறியியல் கல்லுாரி, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பல்வேறு தொழில் வாய்ப்புகள் குவிந்து கிடப்பதால், பெங்களூருக்கு திருப்பூரில் இருந்து செல்வோர் எண்ணிக்கை அதிகம். திருப்பூர் - -பெங்களூரு இடையே வாராந்திர ரயில் இயக்கப்பட வேண்டும்.
பாசஞ்சர் என்னாச்சு?
சேலத்தில் இருந்து ஈரோடு, திருப்பூர் வழியாக கோவைக்கு பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டு வந்தது. ஞாயிறு தவிர வாரத்தின் ஆறு நாட்களும் தினமும் இருமுறை இயக்கப்பட்டு வந்தது. தினமும் 15 ஆயிரம் பயணிகள் பயணித்து வந்த நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது; திரும்ப இயக்கத்துக்கு கொண்டு வரப்படவில்லை. இதில், 5 ஆயிரம் பயணிகள் 'பாஸ்' பெற்றிருந்தனர்.
எம்.பி.,யின் கடமை
சுப்பராயனே மீண்டும் எம்.பி., யாக தேர்வாகியுள்ளார். மூன்று அல்லது ஆறு மாதத்துக்கு ஒருமுறை தென்னக ரயில்வே, சேலம் கோட்டம் நடத்தும் ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டத்தில் தவறாமல் எம்.பி., பங்கேற்க வேண்டும். திருப்பூருக்கு தேவையான ரயில்கள், அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை ஒன்று விடாமல் கேட்டு பெற வேண்டும். பெற முடியவில்லை என்றால், ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே வாரியத்தில் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.