ADDED : ஜூன் 03, 2024 12:58 AM

பல்லடம்;பருவாய் கிராமத்தில், அரசு பள்ளி கட்டட மேற்கூரை, செம்மண் பயன் படுத்தி கட்டப்பட்ட அவலம், ஒரு நாள் மழையால் வெளிச்சத்துக்கு வந்தது.
பல்லடம் ஒன்றியம், பருவாய் ஊராட்சியில் அரசு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். கடந்த, 2022--23ம் ஆண்டுக்கான பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2.19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.
மார்ச் மாதம் கட்டடம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் பெய்த மழை காரணமாக, கட்டட மேற்கூரையில் மழைநீர் தேங்கி நின்றது. தொடர்ந்து, தேங்கி நின்ற மழைநீர் கட்டடத்தின் உட்புறமாக கசிந்ததில், உள்ளே வைக்கப்பட்டிருந்த சில கம்ப்யூட்டர்கள் சேதமானதாக கூறப்படுகிறது.
அப்பகுதியினர் கூறுகையில், 'ஜல்லி, சிமென்ட்டுக்கு மாற்றாக 4 'இன்ச்' அளவுக்கு செம்மண் கொண்டு நிரப்பி மேற்கூரை கட்டப்பட்டதால், ஒரு நாள் மழைக்கு செம்மண் அனைத்தும் கரைந்து, மேற்கூரையில் மழைநீர் குளம் போல் தேங்கியது.
தண்ணீர் வெளியே செல்லவும் வடிகால் அமைக்காததால், தண்ணீர் உள்ளே கசிந்து கம்ப்யூட்டர்கள் மேல் விழுந்துள்ளது. மட்டமான முறையில் கட்டப்பட்டுள்ள கட்டடம், தற்போது தனியார் பங்களிப்புடன் சீரமைக்கப்பட்டு வருகிறது.
கான்கிரீட் கட்டடம் என்ற பெயரில் செம்மண் கொண்டு மேற்கூரை கட்டப்பட்டுள்ளது. பள்ளி திறப்புக்கு முன்பாகவே தெரிந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.