/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஸ்மார்ட் வகுப்பறை துவங்குவதில் சிக்கல் தாமதமாகும் இணையதள இணைப்பு ஸ்மார்ட் வகுப்பறை துவங்குவதில் சிக்கல் தாமதமாகும் இணையதள இணைப்பு
ஸ்மார்ட் வகுப்பறை துவங்குவதில் சிக்கல் தாமதமாகும் இணையதள இணைப்பு
ஸ்மார்ட் வகுப்பறை துவங்குவதில் சிக்கல் தாமதமாகும் இணையதள இணைப்பு
ஸ்மார்ட் வகுப்பறை துவங்குவதில் சிக்கல் தாமதமாகும் இணையதள இணைப்பு
ADDED : ஜூன் 23, 2024 11:58 PM
உடுமலை:கல்வியாண்டு துவங்கியும், பள்ளிகளில் தாமதமாகும் இணையதள இணைப்பால், ஸ்மார்ட் வகுப்பறைகள் துவங்குவதில் சிக்கல் நீடிக்கிறது.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தின் வாயிலாக, சிறந்த கல்வி கற்பிக்கும் நோக்கத்தில், ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் உயர்தர ஆய்வகங்கள் அமைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அரசு துவக்கப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளும், நடுநிலைப்பள்ளிகளில் உயர்தர கம்ப்யூட்டர் ஆய்வகங்களும் நடப்பு கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்படவுள்ளன.
இதற்கு பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் வாயிலாக, இணைய இணைப்பு பெற்றிருப்பதற்கும், பள்ளிகளில் அதற்கான தனி வகுப்பறைகள் தயாராக வைப்பதற்கும், கல்வித்துறை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஆனால் முதற்கட்டமான இணையதள இணைப்பு பெறுவது, தொடர்ந்து பல பள்ளிகளில் சிக்கலாகவே உள்ளது.
உடுமலை கோட்டத்துக்குட்பட்ட பல கிராமப்பகுதி அரசு பள்ளிகளில், இணையதள இணைப்பு பெறுவதில் தொடர்ந்து தாமதமாகிறது. பள்ளி நிர்வாகத்தின் சார்பில், பலமுறை அணுகியும் இதுவரை இணைப்பு வழங்கப்படவில்லை.
கல்வியாண்டு துவங்கி வகுப்புகளும் நடக்கிறது. இணையதள இணைப்பு பெற்ற பின், தொழில்நுட்ப குழுவினர் பள்ளிகளை பார்வையிட்டு, அதற்கான சாதனங்களை பொருத்தி, சோதனை செய்த பின்தான் முழுமையான ஸ்மார்ட் வகுப்புகள் துவக்கப்படுகிறது.
இந்நிலையில், முதற்கட்டப்பணிகள் இவ்வாறு இழுபறியாக இருப்பதால், தலைமையாசிரியர்கள் வேதனையில் உள்ளனர்.
மாநில அரசு இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதுடன், இணையதள இணைப்பு வழங்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டுமெனவும், தலைமையாசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
பல பெற்றோர் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் துவங்குவதை, வரவேற்று தான் குழந்தைகளை சேர்த்துள்ளனர். ஆனால், இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என, பள்ளி நிர்வாகத்தினரிடம் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
ஸ்மார்ட் வகுப்பறைகள் வருவதில் உள்ள, நடைமுறை சிக்கல்களை கூறினாலும் எடுத்துக்கொள்வதில்லை. பல பெற்றோர் வேறு பள்ளிக்கு மாற்றுவது குறித்தும் தெரிவிக்கின்றனர். அரசு தான் இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு கூறினர்.
தமிழக அரசும், இப்பிரச்னையில் தலையிட்டு உடனடியாக தீர்வு ஏற்படுத்த வேண்டும்.