புது மாப்பிள்ளை தற்கொலை
திருப்பூர் ஒன்றியம், வள்ளிபுரம் ஊராட்சி, அப்துல் கலாம் நகரை சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 30, பனியன் தொழிலாளி. இவருக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. குடும்ப தகராறில் கடந்த, 20 நாட்களுக்கு முன் மனைவி கோபித்து கொண்டு அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் இருந்த ரஞ்சித்குமார், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பெருமாநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
சிறுமி கர்ப்பம்: டெய்லர் கைது
அவிநாசி பகுதியை சேர்ந்த சின்னசாமி மகன் கேசவன், 21. டெய்லர். பத்தாம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். சிறுமி கர்ப்பமானார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அவிநாசி அனைத்து மகளிர் போலீசார் கேசவனை, 'போக்சோ' சட்டப்பிரிவின் கீழ் கைது செய்து, மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில் சிறையில் அடைத்தனர்.
வழிப்பறி முயற்சியில் கைது
அவிநாசி, தெக்கலுார் அருகே செங்காளிபாளையம் பகுதியில் தோட்டத்தில் பூவாத்தாள், 70, என்பவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, டூவீலரில் வந்த சேலம் மாவட்டம், மேட்டூரை சேர்ந்த தனசேகர், 33, என்பவர் மூதாட்டி அணிந்திருந்த தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்ப முயன்றார். மூதாட்டி சத்தம் போடவே தனசேகர் டூவீலரில் தப்பினார். அவிநாசி போலீசார், தனசேகரை கைது செய்து டூவீலரை பறிமுதல் செய்தனர்.