Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ குறைகளைக் கொட்டித்தீர்க்க மக்கள் ஆயத்தம்

குறைகளைக் கொட்டித்தீர்க்க மக்கள் ஆயத்தம்

குறைகளைக் கொட்டித்தீர்க்க மக்கள் ஆயத்தம்

குறைகளைக் கொட்டித்தீர்க்க மக்கள் ஆயத்தம்

ADDED : ஜூன் 07, 2024 12:47 AM


Google News
திருப்பூர்:தேர்தல் நடத்தை விதிகள் திரும்பப்பெறப்பட்டுள்ளதை அடுத்து, 82 நாட்களுக்குப்பின் அரசு அலுவலகங்கள் இயல்புநிலை திரும்புகின்றன. குறைகேட்பு கூட்டங்களில், தங்கள் பிரச்னைகளை, கலெக்டரிடம் கொட்டித்தீர்க்க பொதுமக்களும், விவசாயிகளும் தயாராக உள்ளனர்.

நாடு முழுவதும் ஏழு கட்ட லோக்சபா தேர்தலுக்கான தேதியை, கடந்த மார்ச் 16ம் தேதி, தேர்தல் கமிஷன் அறிவித்தது. தேர்தல் அறிவிப்பு வெளியான உடனேயே, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

அரசு விழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன; அரசிடமிருந்து புதிய திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை. ஊரகம், நகர்ப்புற பகுதிகளில் ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்ட பணிகள் மட்டுமே நடைபெற்றுவருகின்றன; புதிய பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.

தொடர்ந்த கட்டுப்பாடுகள்


பொதுமக்கள், வர்த்தகர்கள் உள்பட அனைவரும் பணம், பரிசுப்பொருட்கள் எடுத்துச்செல்ல, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும், கலெக்டர் தலைமையில் வாரந்தோறும் திங்கள் கிழமை நடத்தப்படும் பொதுமக்கள் குறைகேட்பு முகாம்; மாதந்தோறும் நடத்தப்படும் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்; அடையாள அட்டை வழங்குவதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தப்படும் மருத்துவ முகாம் உள்ளிட்டவையும் நிறுத்தப்பட்டன.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், புகார் மனுக்கள் பெட்டி வைக்கப்பட்டு, பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டுவந்தது. வருவாய்த்துறை உள்பட அரசு அதிகாரிகள், அலுவலர் அனைவரும் வழக்கமான அலுவல் பணிகளை தவிர்த்து, முழுநேரம் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். பொதுமக்களால், அதிகாரிகளை நேரடியாக அணுகி தங்கள் பிரச்னைகளை தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ல் முதல் கட்ட லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து பறக்கும்படையின் வாகன சோதனைகள் நிறுத்தப்பட்டபோதும்கூட, தேர்தல் நடத்தை விதிகள் தொடர்ந்தன.

இம்மாதம் 1ம் தேதியுடன் நாடு முழுவதும் ஏழு கட்ட தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. கடந்த 4ம் தேதி, ஓட்டு எண்ணிக்கை முடிவடைந்து, வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது. மத்தியில் புதிய அரசு விரைவில் பதவியேற்க உள்ளது.

லோக்சபா தேர்தல் என்கிற திருவிழா நிறைவடைந்ததையடுத்து, தேர்தல் கமிஷன் ஏற்கனவே அறிவித்தபடி, நேற்று நள்ளிரவுடன் தேர்தல் நடத்தை விதிகள் திரும்பப்பெறப்பட்டுள்ளன.

வழக்கமான அலுவல் பணி


தேர்தலுக்காக சுழன்ற அரசு அலுவலர்கள், வழக்கமான அலுவல் பணிக்கு திரும்பியுள்ளனர்; அரசு அலுவலகங்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன.

தேர்தல் நடத்தை விதிகள் விலகியுள்ளதையடுத்து, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், வரும் 10ம் தேதி முதல் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை, மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தேர்தல் விதிகள் திரும்பப்பெறப்பட்டுள்ள போதும், முன்னேற்பாடுகள் செய்யப்படாததால், இன்று முகாம் நடைபெறாது; வரும் 14ம் தேதி முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடத்தப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாதந்தோறும் மூன்றாவது வாரம், சப்கலெக்டர் தலைமையில், கோட்ட அளவிலும்; நான்காவது வாரம், கலெக்டர் தலைமையில், மாவட்ட அளவிலும் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது. கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக குறைகேட்பு கூட்டம் நடைபெறாததால், தங்கள் பிரச்னைகளை கலெக்டர் உள்பட உயர் அதிகாரிகளின் நேரடி கவனத்துக்கு கொண்டுசெல்ல முடியாமல், விவசாயிகள் தவித்துக்கொண்டிருக்கின்றனர். இம்மாதம் கோட்டம், மாவட்ட அளவிலான குறைகேட்பு கூட்டங்களை தவறாமல் நடத்தவேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us