Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ குடிநீர் திட்டங்களை செயல்படுத்துவதில் குளறுபடி தட்டுப்பாட்டால் மக்கள் பாதிப்பு

குடிநீர் திட்டங்களை செயல்படுத்துவதில் குளறுபடி தட்டுப்பாட்டால் மக்கள் பாதிப்பு

குடிநீர் திட்டங்களை செயல்படுத்துவதில் குளறுபடி தட்டுப்பாட்டால் மக்கள் பாதிப்பு

குடிநீர் திட்டங்களை செயல்படுத்துவதில் குளறுபடி தட்டுப்பாட்டால் மக்கள் பாதிப்பு

ADDED : ஜூலை 30, 2024 12:54 AM


Google News
உடுமலை;திருமூர்த்தி அணையை ஆதாரமாக கொண்டு செயல்படும் கூட்டு குடிநீர் திட்டங்களில் நிலவும் குளறுபடி காரணமாக, பேரூராட்சி, ஊராட்சிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றிய கிராமங்கள் மற்றும் தளி, கணியூர், மடத்துக்குளம், கொமரலிங்கம், சங்கராமநல்லுார் பேரூராட்சிகளுக்கு, திருமூர்த்தி அணையை ஆதாரமாக கொண்டு, குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக, 5 கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டங்கள் வாயிலாக, தினமும், 3.90 கோடி லிட்டர் குடிநீர் எடுத்து, வினியோகம் செய்யும் வகையில் திட்ட வடிவமைப்பு உள்ளது.

இந்த கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு, சுத்திகரிப்பு மையம், 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம், அணையில் திருப்தியான நீர் இருப்பு, பிரதான குழாய்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் என கட்டமைப்புகள் இருந்தாலும், திட்டத்தை முறையாக செயல்படுத்துவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

இதனால், ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளுக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்ட குடிநீர் வழங்கப்படுவதில்லை. இதன் காரணமாக, பொதுமக்களுக்கான குடிநீர் வினியோகத்தில் சிக்கல் ஏற்படுவதோடு, கிராமங்களில் குடிநீர் கேட்டு போராட்டங்களும் நடந்து வருகிறது.

எனவே, குடிநீர் திட்டங்களை முறையாக செயல்படுத்தவும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு திட்ட அடிப்படையில் வழங்க வேண்டிய நீரை வழங்க, அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது:

திருமூர்த்தி அணை கூட்டு குடிநீர் திட்டங்கள், மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு, உள்ளாட்சி அமைப்புகளுக்கு குறிப்பிட்ட குடிநீர் அளவு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அணையில் நீர் இருப்பு, தடையில்லா மின்சாரம் இருந்தாலும், குடிநீர் திட்ட இயக்க பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அதனை முறையாக கண்காணிக்க வேண்டிய குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு குடிநீரை வழங்குவதிலும் பாரபட்சம் காட்டப்படுவதோடு, அதிகளவு முறைகேடும் நடக்கிறது. இதனால், ஒவ்வொரு ஊராட்சிகளுக்கும், திட்ட ஒதுக்கீடு செய்யப்பட்ட குடிநீரில், 40 சதவீதம் கூட வருவதில்லை.

இதனால், கிராமங்களில் குடிநீர் வினியோகத்தில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது. குழாய் உடைப்பு, மின் மோட்டார் பழுது என பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. மாற்று மின் மோட்டார்கள், குழாய் உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக சரி செய்தல் உள்ளிட்ட பல்வேறு நிபர்ந்தனைகள் அடிப்படையிலேயே தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

குடிநீர் திட்டத்தில் தொடர்ந்து பிரச்னைகள் நிலவி வந்த நிலையில், புதிதாக கூடுதல் குடிநீர் திட்டம், பிரதான குழாய்கள் மாற்றி அமைத்தது, அடிக்கடி உடைப்பு ஏற்படும் பகுதிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் என, அனைத்தும் சரி செய்யப்பட்டது.

இருப்பினும், 24 மணி நேரமும் செயல்பட வேண்டிய, குடிநீர் திட்டம் முறையாக செயல்படாததால், சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, குடிநீர் திட்டங்கள் வாயிலாக, முழுமையாக குடிநீர் எடுப்பதையும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு திட்ட வடிவமைப்பு அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட குடிநீரை வழங்க வேண்டும்.

குடிநீர் திட்ட செயல்பாடுகளை, மாவட்ட கலெக்டர் தலைமையில், ஒன்றிய அதிகாரிகள், பேரூராட்சி மற்றும் ஊராட்சி தலைவர்கள் கண்காணிக்கும் வகையில், கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்.

இவ்வாறு, தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us