/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கோமாரி தடுப்பூசி முகாம் 10ல் துவக்கம் கோமாரி தடுப்பூசி முகாம் 10ல் துவக்கம்
கோமாரி தடுப்பூசி முகாம் 10ல் துவக்கம்
கோமாரி தடுப்பூசி முகாம் 10ல் துவக்கம்
கோமாரி தடுப்பூசி முகாம் 10ல் துவக்கம்
ADDED : ஜூன் 07, 2024 12:34 AM
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கால்நடை மருந்தகங்களில், வரும் 10ம் தேதி முதல், கோமாரி நோய் தடுப்பூசி முகாம் துவங்குகிறது.
வைரஸ் நச்சுயிரியால், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய் ஏற்படுகிறது. கால், வாய் கணை நோய், குளம்புவாத நோய் என்றும் சொல்கின்றனர். கோமாரி பாதித்த மாடுகளின், வாயின் மேற்பகுதி, மூக்கு துவாரம், நாக்கு ஆகியவற்றில் புண்கள் வரும்; சரியான தீவனம் எடுக்காது. வாயிலிருந்து எச்சில் வடிந்துகொண்டேயிருக்கும். காய்ச்சல் வரும். இந்த அறிகுறிகள் இருந்து, கவனிக்காமல் விட்டால், மாடுகள் இறக்கும் அபாயமும் ஏற்படும்.
கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவது, சினை பிடிப்பதில் தடை, எருதுகளின் திறன் குறைவது, இளம் கன்றுகள் இறப்பு காரணமாக கால்நடை வளர்ப்பாளருக்கும் பெரும் பொருளாதார நஷ்டம் ஏற்படும்.
பெரும்பாலும் பருவ நிலை மாறும்போது, கோமாரி பாதிப்பு அதிகரித்துவிடுகிறது. தற்போது கோடைக்காலம் முடிவடைந்துள்ளது; பருவமழைக்காலம் துவங்கியுள்ளது. கால்நடை வளர்ப்பாளர்கள், தங்கள் கால்நடைகளை, நோய் தாக்குதல்களிலிருந்து கவனமாக பாதுகாத்துக்கொள்ளவேண்டியது அவசியமாகிறது.
கால்நடை பராமரிப்புத்துறை மூலம், தேசிய கோமாரி தடுப்பூசி திட்டத்தில், கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஆறு மாதத்துக்கு ஒருமுறை வீதம், ஆண்டுக்கு இரண்டு முறை, அனைத்து கால்நடைகளுக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள கால்நடைகளுக்கு, கோமாரி தடுப்பூசி செலுத்தும் முகாம், வரும் 10ம் தேதி துவங்கி அடுத்த 21 நாட்களுக்கு நடைபெறுகிறது.
மாவட்டத்தில், 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமப்புறங்கள், குக்கிராமங்கள், நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து கால்நடைகளுக்கும், கால்நடை மருந்தகங்களில் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.