/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தனிப்பயிராக பாக்கு சாகுபடிக்கு ஆர்வம்: தென்னையில் சோதனையால் மாற்றம் தனிப்பயிராக பாக்கு சாகுபடிக்கு ஆர்வம்: தென்னையில் சோதனையால் மாற்றம்
தனிப்பயிராக பாக்கு சாகுபடிக்கு ஆர்வம்: தென்னையில் சோதனையால் மாற்றம்
தனிப்பயிராக பாக்கு சாகுபடிக்கு ஆர்வம்: தென்னையில் சோதனையால் மாற்றம்
தனிப்பயிராக பாக்கு சாகுபடிக்கு ஆர்வம்: தென்னையில் சோதனையால் மாற்றம்
ADDED : ஜூலை 08, 2024 01:55 AM

உடுமலை;தேங்காய் விலை வீழ்ச்சி மற்றும் தென்னையில் தொடர் நோய்த்தாக்குதல் காரணமாக, பாக்கு மரங்களை தனிப்பயிராக சாகுபடி செய்து பராமரிக்க, உடுமலை பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.
உடுமலை சுற்றுப்பகுதியில், கிணற்றுப்பாசனத்துக்கு நீண்ட கால பயிராக, தென்னை பல ஆயிரம் ஏக்கரில் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக தேங்காய் மற்றும் கொப்பரைக்கு போதிய விலை கிடைக்கவில்லை.
மேலும், பல வித வாடல் நோய் பரவல் அதிகரித்து, தென்னை மரங்கள் பராமரிப்பில், அதிக செலவிட வேண்டியுள்ளது.
இதனால், தென்னை சாகுபடியை கைவிட்டு, மாற்றுச்சாகுபடிக்கு விவசாயிகள் ஆர்வம் காட்டத்துவங்கியுள்ளனர். அவ்வகையில், பரவலாக தென்னையில் ஊடுபயிராக இருந்த பாக்கு சாகுபடியை, தற்போது தனிப்பயிராகவும் பராமரிக்க துவங்கியுள்ளனர்.
தேவனுார்புதுார், தளி, பாண்டியன்கடு, நல்லாறு காலனி உள்ளிட்ட மேற்குத்தொடர்ச்சி மலை அடிவார கிராமங்களில், பாக்கு சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது: பாக்கு மரங்கள், 20 முதல் 50 ஆண்டுகள் வரை பலன் கொடுக்கிறது. நீர் தேவை கூடுதலாக இருந்தாலும், பராமரிப்பு செலவு குறைவாகவே உள்ளது.
ஆண்டுக்கு ஆறு முறை பாக்கு காய்களை அறுவடை செய்கிறோம். சில வியாபாரிகள் குத்தகை அடிப்படையில், பாக்கு மட்டை, பாக்கு காய்களை கொள்முதல் செய்து கொள்கின்றனர்.
பாக்கு மட்டைகளை காய வைத்து பதப்படுத்தி விற்கப்படுகிறது. பாக்கு மட்டை தேவை அதிகரிப்பு காரணமாக, ஓரளவு விலை கிடைக்கிறது.
பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி, பாக்குமட்டை, டம்ளர் உள்ளிட்ட பொருட்கள் தயாரிப்புகளை ஊக்கப்படுத்தினால், மேலும் கூடுதல் வருவாய் கிடைக்கும். இவ்வாறு, தெரிவித்தனர்.