ADDED : ஜூலை 19, 2024 12:32 AM

திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கே.எஸ்.சி., பள்ளி வீதியில், குழாய் பதிப்பு பணிகள் பல மாதங்களாக முடிவுக்கு வராமல் இழுபறியாக கிடக்கிறது.
இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு 24 மணி நேர குடிநீர் வழங்கும் வகையில், நான்காவது குடிநீர் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரதான குழாய் பதித்து சோதனை அடிப்படையில் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக பணிகள் இழுபறியாகவே உள்ளது.
குழாய் பதிக்க தோண்டிய குழிகள் மூடப்படாமலும், இணைப்பு வழங்கும் பணிகள் முடிவடையாமலும் அவதி நிலவுகிறது. ரோடும் சேதமாகி வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து 'தினமலர்' திருப்பூர் நாளிதழில் செய்தி வெளியானது. இதனால், நேற்று காலை மாநகர செயற்பொறியாளர் கண்ணன், கவுன்சிலர் கண்ணப்பன் மற்றும் அலுவலர்கள் அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர்.
கண்ணன் கூறியதாவது:
இப்பகுதியில், 14 வீதியில், 1,200 வீடுகளுக்கு குழாய் இணைப்புகள், 24 மணி நேரம் குடிநீர் வழங்கும் வகையில், வழங்கப்பட்டு வருகிறது. இதில், மூன்று வீதிகளில், குழாய்கள் மிகவும் பலவீனமாக உள்ளதால், குடிநீர் சப்ளை செய்யும் போது, தாக்குப்பிடிக்காமல் உடைப்பு ஏற்பட்டு, பணி இழுபறியாக உள்ளது.
இதற்கு தீர்வு காணும் வகையில் புதிய குழாய்கள் பதித்தும், வீட்டு குழாய் இணைப்பு சோதனை அடிப்படையில், மூன்று முறைக்கு குறையாமல் குடிநீர் சப்ளை செய்த பின்னரே இணைப்பு குழாய்கள் பதிக்கப்படும். இப்பணிகள் விரைந்து முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.