Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பருத்தி ஆடை உற்பத்திக்கு சிறப்பு ஜவுளி கொள்கை தொழில்துறையினர் எதிர்பார்ப்பு

பருத்தி ஆடை உற்பத்திக்கு சிறப்பு ஜவுளி கொள்கை தொழில்துறையினர் எதிர்பார்ப்பு

பருத்தி ஆடை உற்பத்திக்கு சிறப்பு ஜவுளி கொள்கை தொழில்துறையினர் எதிர்பார்ப்பு

பருத்தி ஆடை உற்பத்திக்கு சிறப்பு ஜவுளி கொள்கை தொழில்துறையினர் எதிர்பார்ப்பு

ADDED : ஜூன் 24, 2024 02:19 AM


Google News
திருப்பூர்;பருத்தி ஆடையை தேசிய ஆடையாக அறிவிக்க வேண்டும்; உற்பத்தியை ஊக்குவிக்க சிறப்பு ஜவுளி கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என்பது, திருப்பூரின் புதிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.

திருப்பூரில் நடைபெற்று வரும் பின்னலாடைத் தொழில், 15 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக உள்ளது. ஆண்டுக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி வர்த்தகமும், 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு உள்நாட்டு வர்த்தகமும் நடக்கிறத.

பின்னலாைடத் துறையில், 90 சதவீதம் குறு, சிறு தொழிற்சாலைகளே. பல்வேறு காரணங்களால், பொருளாதார பின்னடைவும், மூலப்பொருள் விலையேற்றமும் உருவாகியுள்ளது. மத்திய அரசு, வரும் ஜூலை மாதம் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில், பின்னலாடை தொழில் வளர்ச்சிக்கான நல்ல அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்பதுதான், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா), திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம்( டீமா), பின்னல் துணி உற்பத்தியாளர் சங்கம்(நிட்மா) உள்ளிட்ட திருப்பூர் தொழில் அமைப்புகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

தொழில்துறையினர் கூறியதாவது:

வங்கதேசத்தில் இருந்து, அதிக அளவு ஆடைகள் இறக்குமதியாகின்றன. பருத்தி விலையை சீராக பராமரிக்க, 11 சதவீத இறக்குமதி வரியை நீக்க வேண்டும். நலிந்துள்ள தொழில்களை மீட்டெடுக்க, சிறப்பு நிதி கொள்கையை அரசு அமல்படுத்த வேண்டும்.

தேசிய ஆடையாகபருத்தி ஆடை


பருத்தி ஆடையை தேசிய ஆடையாக அறிவிக்க வேண்டும். பருத்தி ஆடை உற்பத்தியை ஊக்குவிக்க சிறப்பு ஜவுளி கொள்கை உருவாக்கப்பட வேண்டும். சர்வதேச வர்த்தகத்தில், இந்தியாவின் பங்களிப்பு, 6 சதவீதமாக இருக்கிறது. கடந்த, 15 ஆண்டுகளாக பின்னலாடை ஏற்றுமதி 3.8 சதவீதமாக தொடர்கிறது. உலக அளவில் பார்க்கும் போது, இந்திய ஆயத்த ஆடை வர்த்தகம் பின்னே சென்றுள்ளது. அதிக வேலை வாய்ப்பு வழங்கும் ஜவுளித்தொழிலில், அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

மூலப்பொருள் தடையின்றி கிடைக்க வேண்டும்; உற்பத்தி பிரிவுக்கு புதிய தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். இந்தஇரண்டு தேவையும், இந்தியாவில் தேவைக்கு அதிகமாக இருக்கிறது; இருப்பினும், ஜவுளித்தொழிலில் வளர்ச்சி இல்லாமல் உள்ளது.

சீனாவிடம் 36 சதவீதம்


சீனாவில் இருந்து, 36 சதவீதம்; வங்கதேசத்தில் இருந்து, 12 சதவீதம் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் நடக்கிறது. வியட்நாம், எத்தியோப்பியா, இலங்கை போன்ற சிறிய நாடுகளில், இத்தொழிலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

இந்தியாவில், 150 கோடிக்கும் அதிகமான மக்கள் இருந்தும், ஜவுளித்தொழிலில் பின்னால் இருக்கிறோம்.

தனி வாரியம் அவசியம்


இத்தகைய மாற்றங்களை சரிசெய்ய, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தலைமையில், தனி வாரியம் அமைக்க வேண் டும். கிளஸ்டர் முறையில், அனைத்து மாநிலங்களுக்கும் இத்தொழிலை விரிவாக்கம் செய்ய வேண்டும். அதிக அளவு சிறிய ஜவுளி பூங்காக்களை உருவாக்க வேண்டும்.

மத்திய ஜவுளித்துறை அமைச்சகம்

கோரிக்கையை செவிமடுக்குமா?

மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் நேரம் ஒதுக்கி கொடுத்தால், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி தொழில் மேம்பாட்டுக்கான கோரிக்கைகளை முன்வைக்க உதவியாக இருக்கும். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிறுவன தலைவர் சக்திவேல் தலைமையில், ஒரே குழுவாக சென்று, திருப்பூர் பின்னலாடைத் தொழிலுக்கான அவசர தேவைகள் மற்றும் மத்திய அரசு உதவிகள் குறித்து, மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்கலாம் என்று தொழில்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us