ADDED : ஜூன் 03, 2024 01:00 AM
அவிநாசி:அவிநாசி, திருமுருகன் பூண்டி, கை காட்டிப்புதுார், ஆட்டையாம்பாளையம், கருவலுார், மடத்துப்பாளையம், வேலாயுதம்பாளையம், காசிக்கவுண்டன்புதுார் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் காற்றுடன் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
ராயம்பாளையம் பகுதியில் ஊராட்சி ஒன்றியபள்ளி அருகில் மிகப் பழமையான வேப்பமரம் வேருடன் சாய்ந்தது. மேலும் மாரியம்மன் கோவில் முதல் ராயம்பாளையத்தில் பல இடங்களில் ஆறுக்கும் மேற்பட்ட மிகப்பெரிய மரங்கள் வேருடன் சாய்ந்தது. பல இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள், கம்பிகள் மீது விழுந்ததால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.
ராயம்பாளையத்தில் பால்காரர் ராயப்பன் என்பவரது தோட்டத்தில் குலைதள்ளிய நிலையில் அறுவடையாக இருந்த 1000 வாழைகள் முற்றிலும் சாய்ந்தது.
அவிநாசி, மங்கலம் ரோட்டில் தேவராயம்பாளையம் செல்லும் வழியில் உள்ள மின் கம்பத்தின் மீது ஜீப் மோதியதில் மின்கம்பம் சேதம் அடைந்தது. அந்தப் பகுதி முழுவதும் மின்வினியோகம் தடைப்பட்டது.
மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள், அவிநாசி பேரூராட்சி ஊழியர்கள் ஆகியோர் ஈடுபட்டனர்.
கறவை மாடு பலி
தண்டுக்காரன்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ராமியம்பாளையத்தில் உள்ள மேற்குத் தோட்டத்தில் விவசாயி நாகராஜன் என்பதற்கு சொந்தமான ஆறு கறவை மாடுகள் இருந்தன.
நேற்று நாகராஜன் பால் கறந்து கொண்டிருந்துள்ளார். அப்போது இடி மின்னலுடன் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய ஆரம்பித்தது. மின் கம்பத்தில் இருந்த கம்பி திடீரென அறுந்து ஒரு மாட்டின் மீது விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து மாடு துடிதுடித்து இறந்தது. அதிர்ஷ்டவசமாக நாகராஜன் உயிர் தப்பினார்.