/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடு விவசாயிகள் போராட்டத்தால் பரபரப்பு சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடு விவசாயிகள் போராட்டத்தால் பரபரப்பு
சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடு விவசாயிகள் போராட்டத்தால் பரபரப்பு
சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடு விவசாயிகள் போராட்டத்தால் பரபரப்பு
சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடு விவசாயிகள் போராட்டத்தால் பரபரப்பு
ADDED : ஜூலை 31, 2024 02:42 AM

உடுமலை;கணியூர் சார்பதிவாளர் அலுவலகத்தில், போலி ஆவணங்கள் வாயிலாக நிலம் அபகரிப்பு, முறைகேடுகளை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மடத்துக்குளம் தாலுகா, கணியூர் சார்பதிவாளர் அலுவலகத்தில், பதிவு விதிகளை மீறி, முறைகேடாக ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் கோவில் நிலங்கள், போலி ஆவணங்கள் வாயிலாக அபகரிக்கப்பட்டுள்ளது.
புரோக்கர்கள் வாயிலாக, ஆவணப்பதிவுக்கு, லட்சக்கணக்கான ரூபாய் லஞ்சம் பெற்று வரும், சார்பதிவாளர் தாமோதரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த, மூன்று ஆண்டாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள், முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும், ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் சங்கம் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது.
நேற்று, சார்பதிவாளர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடந்தது. தாலுகா செயலாளர் வீரப்பன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் குமார், தாலுகா தலைவர் ராஜரத்தினம், கணேசன், வடிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உடுமலை டி.எஸ்.பி., சுகுமாறன் தலைமையில், திருப்பூர் மாவட்ட பதிவாளர் ஜெயப்பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் பேச்சு நடத்தினர்.
இதில், போலி, ஆள் மாறாட்டம் வாயிலாக முறைகேடு ஆவணங்கள் பதிவு குறித்து விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, போலீசில் குற்ற வழக்கு பதிவு செய்யப்படும்.
முறைகேடு ஆவணங்கள் ரத்து செய்யப்பட்டு, உரியவர்களுக்கு ஒப்படைக்கப்படும், என உறுதியளித்தனர். விவசாயிகள் தரப்பில், பாதிக்கப்பட்டவர்களிடம் தனித்தனியாக புகார் பெற்று, அதிகாரிகளிடம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, முற்றுகை போராட்டத்திற்கு பதிலாக, ஆர்ப்பாட்டம் நடந்தது.
சார்பதிவாளர் அலுவலக முற்றுகை போராட்டம் நடத்த ஏராளமான விவசாயிகள் திரண்ட நிலையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.