/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அரசு நிலம் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் உகாயனுார் மக்கள் ஜமாபந்தியில் 'தர்ணா' அரசு நிலம் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் உகாயனுார் மக்கள் ஜமாபந்தியில் 'தர்ணா'
அரசு நிலம் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் உகாயனுார் மக்கள் ஜமாபந்தியில் 'தர்ணா'
அரசு நிலம் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் உகாயனுார் மக்கள் ஜமாபந்தியில் 'தர்ணா'
அரசு நிலம் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் உகாயனுார் மக்கள் ஜமாபந்தியில் 'தர்ணா'
ADDED : ஜூன் 26, 2024 02:30 AM

திருப்பூர்;திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி நடைபெற்றபோது, அரசு நிலம் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, உகாயனுார் பகுதி மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒன்பது தாலுகா அலுவலகங்களிலும் கடந்த 20ம் தேதி முதல், ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. செவந்தாம்பாளையத்தில் உள்ள திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலகத்தில் நேற்று, தெற்கு அவிநாசிபாளையம் பிர்காவுக்கு உட்பட்ட எட்டு கிராமங்களுக்கான ஜமாபந்தி நைபெற்றது.
அதில், பங்கேற்ற உகாயனுார் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள், தெற்கு தாலுகா அலுவலக வளாகத்தில், தரையில் அமர்ந்து, திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். அதிகாரிகள் சமாதானப்படுத்தியும், நகராமல் தொடர்ந்து ஒருமணி நேரத்துக்குமேல் தர்ணாவை தொடர்ந்தனர்.
உகாயனுார் பொதுமக்கள் கூறியதாவது:
பொங்கலுார் ஒன்றியம், உகாயனுார் ஊராட்சியில், ஓடை புறம்போக்கு, 15 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து தனியார் கம்பிவேலி அமைத்துள்ளார். இதுகுறித்து கலெக்டரிடம் மனு அளித்தோம். அதனடிப்படையில், நிலம் அளவை செய்யப்பட்டு, ஆக்கிரமிப்பு உறுதி செய்யப்பட்டது. தேர்தலை காரணம்காட்டி, ஆக்கிரமிப்பை அகற்றாமல் இழுத்தடித்து வந்தனர்.
சமீபத்தில் வருவாய் ஆய்வாளர் மற்றும் துணை தாசில்தார் ஆகியோர், கடந்த 19ம் தேதி ஆக்கிரமிப்பு அகற்றுவதற்காக வந்தனர். ஆனால், ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றாமல், பாதியிலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டனர். அரசு நிலம் ஆக்கிரமிப்பு அகற்றுவதில், அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர். ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றக்கோரி தர்ணாவில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஜமாபந்தி அலுவலரான கலால் உதவி கமிஷனர் ராம்குமார், 'கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்று பொதுமக்களிடம் உறுதியளித்ததால், அனைவரும் கலைந்து சென்றனர்.