/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/விவசாயிகள் சாலை மறியல் எதிரொலி: ஆலை மின் இணைப்பு துண்டிப்பு; இயந்திரத்துக்கு 'பூட்டு'விவசாயிகள் சாலை மறியல் எதிரொலி: ஆலை மின் இணைப்பு துண்டிப்பு; இயந்திரத்துக்கு 'பூட்டு'
விவசாயிகள் சாலை மறியல் எதிரொலி: ஆலை மின் இணைப்பு துண்டிப்பு; இயந்திரத்துக்கு 'பூட்டு'
விவசாயிகள் சாலை மறியல் எதிரொலி: ஆலை மின் இணைப்பு துண்டிப்பு; இயந்திரத்துக்கு 'பூட்டு'
விவசாயிகள் சாலை மறியல் எதிரொலி: ஆலை மின் இணைப்பு துண்டிப்பு; இயந்திரத்துக்கு 'பூட்டு'
ADDED : ஜூலை 06, 2024 10:41 PM

பல்லடம்:ஆலைக்கு எதிராக விவசாயிகள் ஆவேசமடைந்த நிலையில், அதிகாரிகள் குழுவினர் அதிரடியாக நடவடிக்கை எடுத்து, ஆலையின் மின் இணைப்பை துண்டித்தனர்.
பல்லடம் ஒன்றியம், வாவிபாளையம் ஊராட்சி, குள்ளம்பாளையம் கிராமத்தில் தனியார் தொட்டிக்கரி ஆலை உள்ளது. இதனால், கடுமையான மாசு ஏற்பட்டு வருவதாக கூறி, விவசாயிகள் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆலை இயங்க தற்காலிக தடை விதித்த பின்னும், இயங்கி வருவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டினர். எந்தவித நடவடிக்கையும் இல்லை என்று கூறி, பல்லடம் -- உடுமலை ரோட்டில் விவசாயிகள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அரை மணி நேரத்துக்கு மேல் சாலை மறியல் நடந்து வர, தாசில்தார் ஜீவா விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
விவசாயிகள் கூறுகையில், 'கலெக்டர், தாசில்தார், மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஊரக வளர்ச்சி துறை, காவல் துறை என, இத்தனை அதிகாரிகள் இருந்தும், தனியார் ஆலை விதிமுறை மீறி செயல்படுவது எப்படி? இரண்டு நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக கூறியது என்ன ஆனது? நிலத்தடி நீர் மாசடைந்தால் எங்களது வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி விடும். காலில் வேண்டுமானாலும் விழுகிறோம்; தயவு செய்து காப்பாற்றுங்கள். எங்களுக்கு சமாதான வார்த்தைகள் தேவையில்லை' என்றனர்.
'ஆலை மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம்,' என்று கூறிய விவசாயிகளிடம் 'இப்போதே ஆலைக்குள் சென்று ஆய்வு செய்கிறோம். அதன் பிறகு என்ன நடவடிக்கை என்பதை தெரிவிக்கிறேன்' என்று கூறிய தாசில்தார் அதிகாரிகளுடன் ஆய்வுக்கு சென்றார்.
ஆலையின் மின் இணைப்பை அதிகாரிகள் துண்டித்தனர். தொட்டிக்கரி இயந்திரத்தை இயக்க முடியாத வகையில் பூட்டு போடப்பட்டது. உரிய கட்டமைப்புகளை ஏற்படுத்தி, முறையான அனுமதி பெறாமல் ஆலையை இனி இயக்கக் கூடாது என, உரிமையாளரிடம் கையொப்பம் பெறப்பட்டது.
------------------------
தனியார் ஆலைக்கு எதிராக, உடுமலை ரோட்டில், சாலை மறியலில் ஈடுபட்ட வாவிபாளையம் பகுதி விவசாயிகள்.