ADDED : ஜூன் 30, 2024 12:28 AM

திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சிக்கென தனி மொபைல் செயலி துவங்கப்பட்டுள்ளது. புதிய செயலியை ஆர்வமுடன் பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.
திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டுகளில் 13 லட்சம் பேர் வசிக்கின்றனர். ஏறத்தாழ 160 சதுர கி.மீ., பரப்பில் அமைந்துள்ளது. மாநகராட்சி சார்பில் நகரின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் அடிப்படையில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், பல்வேறு சேவைகளும் வழங்கப்படுகிறது.மாநகராட்சி குறித்த முழுமையான விவரங்கள் மற்றும் வழங்கும் சேவைகளை மக்கள் பயன்படுத்தும் வகையில் மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 'நம்ம திருப்பூர்'(Namma Tiruppur) என்ற பெயரில் ஆன்ட்ராய்டு அடிப்படையிலான மொபைல் செயலி இது.
இதில், திருப்பூர் மாநகராட்சியின் விவரங்களை குடியிருப்போர் அறிந்து கொள்ளவும், தங்களுக்கான சேவைகளை எளிதாகப் பெறவும் 'ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம்' ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி தொடர்பான குறைகளையும் பதிவு செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
செயலியை பதிவிறக்கம் செய்தால் 'TCMC' என்ற மென்பொருள் தோன்றும். முதல் முறை பயன்படுத்தும் போது, 'ரிஜிஸ்டர்' பட்டனை உபயோகித்து சுய விவரங்களை பதிவிட வேண்டும். உபயோகிப்பாளர் பெயர், வயது, மொபைல் போன் எண் விவரங்களை பதிவிட வேண்டும். முகவரி விவரங்கள் விருப்பப்படி பதிவு செய்யலாம். பதிவு செய்த பின் மொபைல்போனுக்கு வரும் ஓ.டி.பி., உபயோகித்து உள்ளே நுழையலாம்.
இப்புதிய செயலி அறிமுகப்படுத்திய இரு நாளில் 200க்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில், மக்கள் பிரதிநிதிகளின் பெயர், முகவரி மற்றும் மொபைல் எண்கள் இடம் பெற்றுள்ளன. இருப்பினும் கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் விவரம் உள்ள பகுதியில் அவர்களின் தொடர்பு எண்கள், அலுவலக தொடர்பு எண்கள் இடம் பெறவில்லை என்ற குறை உள்ளது. அதே போல் பணியிட மாற்றம் செய்யப்பட்ட சில அலுவலர்களின் பெயர்களும் அப்டேட் செய்யப்பட வேண்டும்.
முகப்பு திரையில் திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் குறிக்கோள் மற்றும் பணி விவரங்கள் இடம் பெற்றுள்ளது. இதில் உள்ள 'மெனு' தேர்வை உபயோகித்து 'நம்ம திருப்பூர் செயலி' யின் சேவைகளை பயன்படுத்தலாம்.
சிட்டி இன்பர்மேஷன் மெனுவில் திருப்பூர் நகரின் வரலாறு உள்ளது. திருப்பூர் மாவட்ட சுற்றுலா தலங்களின் விவரங்கள் உள்ளது.அட்மினிஸ்ட்ரேடிவ் இன்பர்மேஷன் பகுதியில், வார்டு கவுன்சிலர் விவரங்கள் மற்றும் துறை வாரியான அதிகாரிகளின் விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
'மை கிரீவன்ஸ்' தேர்வை உபயோகித்து மாநகராட்சி தொடர்பான குறைகளை பதிவிடலாம். குறைகளை மாநகராட்சியின் துறை வாரியாகவும், துறை வகைகளையும் குறிப்பிட்டு மற்றும் பிற விவரங்களான வார்டு எண், முகவரி, விவரங்களை கொடுத்து, போட்டோ இருப்பின் அதையும் பதிவேற்றலாம். குறைகளை பதிவு செய்வதற்கு எஸ்.எம்.எஸ்., வாயிலாக தெரியப்படுத்தப்படும். பதிவு செய்த குறைகளின் விவரங்களை பின்பற்ற 'கம்ப்ளைன்ட் ஸ்டேட்டஸ்' என்ற தெரிவை தேர்வு செய்து அதன் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். தீர்வு காணப்பட்ட குறைகள் குறித்த கருத்துகளையும் பதிவிடலாம்.
ஆன்லைன் சேவைகள் தெரிவை தேர்வு செய்து மாநகராட்சியின் சேவைகளான பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள்; கட்டட அனுமதி, குடிநீர் இணைப்பு, பெறுவதற்கான சேவைகளையும் இதில் பெறலாம். 'புராஜெக்ட்ஸ்' மெனுவை தேர்வு செய்து 'ஸ்மார்ட் சிட்டி' மற்றும் 'அம்ரூத்' திட்ட விவரங்களை அறியலாம்.
'கான்டாக்ட் அஸ்' மெனுவில், மாநகராட்சியின் மைய மற்றும் மண்டல அலுவலகங்களின் கூகுள் வரைபடம் மற்றும் முகவரி விவரங்கள் இடம் பெற்றுள்ளது. 'மீடியா கார்னர்' பகுதியில், மாநகராட்சி மேயர் மற்றும் கமிஷனர் ஆகியோரின் அறிக்கை, செய்தி குறிப்பு மற்றும் தினசரி செயல்பாடுகள் குறித்த விவரங்கள் உள்ளன.