/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அடாத மழையிலும் ஓயாத 'நமசிவாய'; திருமுருகன்பூண்டி தேரோட்டம்: சிவனடியார்கள் பரவசம் அடாத மழையிலும் ஓயாத 'நமசிவாய'; திருமுருகன்பூண்டி தேரோட்டம்: சிவனடியார்கள் பரவசம்
அடாத மழையிலும் ஓயாத 'நமசிவாய'; திருமுருகன்பூண்டி தேரோட்டம்: சிவனடியார்கள் பரவசம்
அடாத மழையிலும் ஓயாத 'நமசிவாய'; திருமுருகன்பூண்டி தேரோட்டம்: சிவனடியார்கள் பரவசம்
அடாத மழையிலும் ஓயாத 'நமசிவாய'; திருமுருகன்பூண்டி தேரோட்டம்: சிவனடியார்கள் பரவசம்
ADDED : மார் 13, 2025 06:56 AM

அவிநாசி; வடம் பிடித்ததும், கனமழை பெய்ததால், திருமுருகன்பூண்டி தேரோட்டத்தில், திருமுருகநாத சுவாமி தேர், 50 அடி துாரம் சென்று, பெருமாள் கோவில் அருகே நிறுத்தப்பட்டது. இன்று காலை, 10:00 மணிக்கு மீண்டும் தேரோட்டம் நடக்கிறது.
சிவபெருமான் வேடுபறி திருவிளையாடல் நிகழ்த்தி, சுந்தரரரால் தேவார பதிகம் பாடப்பட்ட ஸ்தலம் திருமுருகன்பூண்டி. சிவபெருமான், திருமுருகநாதர் என்ற பெயரில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கோவிலில், மாசி மகத்தேர்த்திருவிழா, 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு பூஜைகளும், உற்சவமூர்த்திகள் திருவீதியுலா வாகன காட்சிகளும் நடைபெற்றன. 10ம் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், 63 நாயன்மார்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சியும், சுவாமி திருவீதியுலா நிகழ்ச்சியும் நடந்தது.
நேற்று முன்தினம், சுவாமி திருக்கல்யாணமும், யானை வாகனம் மற்றும் அன்னவாகன காட்சியும் நடந்தது. நேற்று காலை, விநாயகர், சோமாஸ்கந்தர், ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத சண்முகநாதர், வல்லியம்மை, சண்டிகேஸ்வரர் தேர்களுக்கு எழுந்தருளினர்.
பக்தர்கள் பரவசம்
காலை, 11:30 மணி முதல், மழை வரும் சூழலுடன், வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. நேற்று, மதியம், திருமுருகநாதசுவாமி தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள், 'ஓம் நமசிவாயா...' கோஷத்துடன் தேர் வடம் பிடித்து இழுத்தனர். சிவனடியார்களும், பக்தர்களும், சங்குநாதம் எழுப்பி வழிபட்டனர். சிவகண பூத வாத்தியம் இசைக்கப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில், கனமழை பெய்ய துவங்கியது. இதனால், நிலையில் இருந்து புறப்பட்ட தேர், 50 அடி துாரத்தில் நிறுத்தப்பட்டது.
இன்று, இரண்டாவது நாளாக, காலை, 10:00 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டு, தேர்களும் நிலை சேர்க்கப்படும். நாளை, பரிவேட்டை, குதிரை வாகனம், சிம்மவாகன காட்சியும், தெப்பத்திருவிழாவும் நடக்க உள்ளது. சிவபெருமான், திருவிளையாடல் புரிந்த, ஸ்ரீசுந்தரர் வேடுபறி திருவிழா, 15 ம் தேதி நடைபெறும்; கூப்பிடு விநாயகர் கோவில் வரை சென்று, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். வரும், 16ல், பிரம்மதாண்டவ காட்சி தரிசனமும், 17 ம் தேதி மஞ்சள் நீர் விழாவும் நடக்கிறது; மயில்வாகன காட்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.