ADDED : ஜூன் 17, 2024 12:18 AM

திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சி பகுதியில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் நொய்யல் கரை மேம்பாடு பணி நடந்து வருகிறது. இதில், நொய்யல் ஆற்றில் சென்று சேரும் கழிவு நீர், வடிகால் அமைத்து, சுத்திகரிப்பு மையம் கொண்டு சென்று, சுத்திகரிப்பு செய்து மீண்டும் ஆற்றில் விடும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக, நொய்யல் ஆற்றின் கரையோரம் கழிவுநீர் வடிகால் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில் பெத்திச்செட்டிபுரம் பகுதியில் ஆற்றின் கரையை ஒட்டி வடிகால் கட்டப்படுகிறது. இந்த வடிகால் அமைந்துள்ள இடத்தில் அதன் குறுக்கு வாக்கில், பிரதான குடிநீர் குழாய்கள் இரண்டு அமைந்துள்ளன.
நொய்யல் ஆற்றைக் கடந்து, ஆலங்காடு, பூச்சக்காடு பகுதிகளில் உள்ள மேல்நிலைத் தொட்டிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லும் வகையில் உள்ளது. இவ்விரு குழாய்களும், கழிவுநீர் வடிகால் கட்டுமானத்தின் உட்புறத்தில் புகுந்து செல்கிறது. இதில், ஒன்று ஏற்கனவே சேதமடைந்து அதிலிருந்து குடிநீர் வெளியேறி இந்த வடிகால் வழியாக வீணாகிறது.
வடிகால் கட்டுமானம் முடித்து, மேற்பகுதி மூடப்பட்டு விட்டால் இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதில் கழிவுநீர் கலந்தாலும் தெரியாது. குழாய் கடந்து செல்லும் இடத்தில், கழிவுகள் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டாலும் கூட, சரி செய்ய முடியாது. எனவே, வடிகாலை கடந்து செல்லும் இடத்தில் பிரதான குடிநீர் குழாய் பாதுகாப்பாக அமைக்க வேண்டும்.