/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தலைவருக்கு எதுவும் தெரிவதில்லையா? பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் கேள்வி தலைவருக்கு எதுவும் தெரிவதில்லையா? பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் கேள்வி
தலைவருக்கு எதுவும் தெரிவதில்லையா? பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் கேள்வி
தலைவருக்கு எதுவும் தெரிவதில்லையா? பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் கேள்வி
தலைவருக்கு எதுவும் தெரிவதில்லையா? பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் கேள்வி
ADDED : ஜூலை 31, 2024 12:40 AM

அவிநாசி:'அவிநாசியில், பேரூராட்சி தலைவருக்கே தெரியாமல், அனைத்தும் நடக்கிறதா?' என கூட்டத்தில், கவுன்சிலர் கேள்வி எழுப்பினார்.
அவிநாசி பேரூராட்சியில், கவுன்சிலர்களின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் தனலட்சுமி தலைமை வகித்தார். செயல் அலுவலர் இந்துமதி (பொறுப்பு), சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி பங்கேற்றனர்.
கவுன்சிலர்கள் பேசியதாவது:
தங்கவேலு (தி.மு.க.,):
சிந்தாமணி பஸ் ஸ்டாப்பில், மதுபான கூடம் திறக்கப்பட்டுள்ளது. மன்ற கூட்டத்தில், எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் போட்டும் கூட, திறக்கப்பட்டுள்ளது. இதனை ஏன் பேரூராட்சி நிர்வாகம் தடுக்கவில்லை. வரும், 3ம் தேதி வரை மதுபானக்கூடத்தை மாற்ற அவகாசம் கலெக்டர் அளித்துள்ளதாக கூறுகிறீர்கள். மதுபான கூடம் அகற்றவில்லை என்றால், உண்ணாவிரதம் இருப்பேன்.
கருணாம்பாள் (காங்.,): ஸ்ரீராம் நகரில், தனியார் இடத்தில் பல மாதங்களாக புதர்கள் மண்டி முள் காடாக உள்ளது. விஷ ஜந்துக்கள், கம்பளி பூச்சிகள் அதிகளவில் வீட்டுக்குள் புகுந்து விடுவதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். அந்த இடத்தை சுத்தம் செய்து தருமாறு பலமுறை தெரிவித்தும், இதுவரை செய்யவில்லை.
ஸ்ரீதேவி (அ.தி.மு.க.,): கைகாட்டிப்புதுார், விஸ்வபாரதி பார்க் பகுதியில் உள்ள சாக்கடையில், பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட சிமென்ட் குழாய்கள் உடைந்தும், மரங்களின் வேர்கள், கற்கள் அடைத்து உள்ளதால், வெளியேறும் கழிவுநீர், வீதியில் உள்ள ரோடுகளில் வெள்ளமாக போகிறது. இதனால், நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சசிகலா (தி.மு.க.,) -: வி.எஸ்.வி காலனி, தாமஸ்புரத்தில் வசிப்போர், 4 ரேஷன் கடைகளில், பொருள் வாங்கி வருகின்றனர். இவர்களுக்கு, கடையில் பொருள் வாங்க கடை வேண்டும் என தெரிவித்திருந்தேன். அதன்படி, ஏ.சி.எம்.எஸ்., நிர்வாகத்தினர் கடை கட்ட நிதி ஒதுக்கி இருப்பதாக கூறியுள்ளனர். எனவே, அதற்கான இடத்தை ஒதுக்க சிறப்பு தீர்மானம் போட வேண்டும்.
சித்ரா (அ.தி.மு.க.,):- தெரு நாய்கள் அதிகரித்துள்ளது. பலமுறை சுகாதார ஆய்வாளரிடம் இது குறித்து கூறினேன். இதனால், வீதிகளில் குழந்தைகள், முதியவர்கள் நடமாட முடியவில்லை.
கோபாலகிருஷ்ணன் -(காங்.,): அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிழற்குடை கட்டும் பணிகளை உடனே துவக்க வேண்டும். இல்லாவிடில், எதனால் நிறுத்தப்பட்டது என விஜிலென்ஸ்க்கு தகவல் அளித்து முறையாக விசாரிக்க கூறுவேன். இது குறித்து, தலைவருக்கு தெரியவில்லை எனக் கூறுவது அதிர்ச்சியாக உள்ளது. ஒரு நிர்வாகத்தில் தலைவருக்கு தெரியாமல் அனைத்தும் நடக்கிறதா? அதிகாரிகளே அனைத்து முடிவும் எடுத்து கொள்ளலாமா?
திருமுருகநாதன் (தி,மு,க.,): சுகாதார ஊழியர்களுக்கு முறையான கால நேரத்தை பதிவு செய்ய வேண்டும். அனைத்து வார்டுகளிலும் கொசுத்தொல்லை மிக அதிகமாக அதிகரித்துள்ளது. கொசு மருந்து அடிக்கும் தவணையை அதிகரிக்க வேண்டும்.
பரகத்துல்லா (தி.மு.க.,): வாணியர் வீதி, முனியப்பன் கோவில் வீதியில், 100 குடிநீர் இணைப்பு உள்ளது. ஒரே சமயத்தில் குடிநீர் திறந்து விடுவதால் போதிய அழுத்தம் இருப்பதில்லை. இதனால், பல வீடுகளுக்கு குடிநீர் செல்வதில்லை. எனவே, அந்தப்பகுதிகளுக்கு இரண்டு முறை குடிநீர் சப்ளை செய்ய வேண்டும்.
தொடர்ந்து, பேரூராட்சி தலைவர் தனலட்சுமி தீர்மானங்கள் குறித்து பேசினார்.
----
அவிநாசி பேரூராட்சி கவுன்சிலர்களின் சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது.