/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நுாற்பாலைக்கு சீரான விலையில் பஞ்சு! எம்.பி.,யிடம் 'சைமா' வலியுறுத்தல் நுாற்பாலைக்கு சீரான விலையில் பஞ்சு! எம்.பி.,யிடம் 'சைமா' வலியுறுத்தல்
நுாற்பாலைக்கு சீரான விலையில் பஞ்சு! எம்.பி.,யிடம் 'சைமா' வலியுறுத்தல்
நுாற்பாலைக்கு சீரான விலையில் பஞ்சு! எம்.பி.,யிடம் 'சைமா' வலியுறுத்தல்
நுாற்பாலைக்கு சீரான விலையில் பஞ்சு! எம்.பி.,யிடம் 'சைமா' வலியுறுத்தல்
ADDED : ஜூன் 18, 2024 11:31 PM

திருப்பூர்;இந்திய பருத்திக்கழகம், பஞ்சு கொள்முதல் செய்து, நுாற்பாலைகளுக்கு சீரான விலையில் வழங்க வேண்டுமென, சைமா சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திருப்பூர் எம்.பி., சுப்பராயன், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் (சைமா) சங்க நிர்வாகிகளை நேரில் சந்தித்து, தொழில் தொடர்பான பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார். சைமா சங்க அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், வெற்றி பெற்ற எம்.பி.,க்கு வாழ்த்து தெரிவித்த நிர்வாகிகள், கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை அளித்தனர்.
சங்க தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். துணை தலைவர் பாலசந்தர் வரவேற்றார். பொதுசெயலாளர் கோவிந்தப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
தலைவர் ஈஸ்வரன் பேசியதாவது:
ஜவுளித்தொழில் சிறப்பாக இருக்க வேண்டுமெனில், மூலப்பொருட்கள் தடையின்றி கிடைக்க வேண்டும். பஞ்சு, நுால் ஆண்டு முழுவதும் சீரான விலையில், தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும். விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும்.
பஞ்சுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். இந்திய பருத்திக்கழகம், பருத்தியை கொள்முதல் செய்து, தொழில்துறையினருக்கு சீரான விலையில் வழங்க வேண்டும். செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தி, விலை உயர்த்துவதை தடுக்க வேண்டும்.
மத்திய அரசிடம் மீண்டும் எடுத்துரைத்து, பருத்தி பஞ்சு தடையின்றி கிடைக்க ஆவன செய்ய வேண்டும். தேவையின்றி, பெரிய நிறுவனங்கள் பஞ்சு வாங்கி பதுக்க அனுமதிக்கவே கூடாது. இந்திய பருத்தி கழகம் கொள்முதல் செய்து, நுாற்பாலைகளுக்கு மட்டும் விற்க வேண்டும். மின் கட்டண உயர்வு அதிகம் என்பதால், முதல்வரிடம் எடுத்துரைத்து, மின் கட்டண உயர்வுகளை திரும்ப பெற முயற்சிக்க வேண்டும்.
திருப்பூர் பனியன் தொழில் கடும் சிரமங்களுக்கு உள்ளாகி, இயல்புநிலை திரும்பியிருக்கிறது. தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க, மத்திய அரசு வாயிலாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எம்.பி., சுப்பராயன் பேசுகையில்,''தொழிலில் ஏற்படும் நெருக்கடி, எவ்வாறு தீர்வு காணலாம் என்பதை, சைமா தலைவர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
இவ்விவரத்தை, உரியபடி அரசு கவனத்துக்கு கொண்டுசெல்ல தீவிர முயற்சி எடுப்பேன். கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல் எம்.பி.,களுடன் கலந்துபேசி, குழுவாக சென்று ஜவுளித்துறை அமைச்சரை சந்தித்து, உங்களது கோரிக்கையை நிறைவேற்றுவேன். தமிழகம் முழுவதும் உள்ள எம்.பி.,களுடன் இணைந்து, தொழில்துறைக்கு துாதுக்குழுவாக செயல்படுவோம்,'' என்றார்.