/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தேச பொருளாதார கட்டமைப்பு திருப்பூருக்கு முக்கிய இடம் மத்திய செயலர் பாராட்டு தேச பொருளாதார கட்டமைப்பு திருப்பூருக்கு முக்கிய இடம் மத்திய செயலர் பாராட்டு
தேச பொருளாதார கட்டமைப்பு திருப்பூருக்கு முக்கிய இடம் மத்திய செயலர் பாராட்டு
தேச பொருளாதார கட்டமைப்பு திருப்பூருக்கு முக்கிய இடம் மத்திய செயலர் பாராட்டு
தேச பொருளாதார கட்டமைப்பு திருப்பூருக்கு முக்கிய இடம் மத்திய செயலர் பாராட்டு
ADDED : ஜூலை 10, 2024 11:58 PM

திருப்பூர்,:''நாட்டின் பொருளாதார கட்டமைப்பில், 35 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலாவணி ஈட்டும் திருப்பூர் முக்கிய இடத்தில் இருக்கிறது,'' என, மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள்துறை செயலர் தாஸ் பேசினார்.
மத்திய மற்றும் மாநில குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை செயலர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவினர், திருப்பூரில் நேற்று பின்னலாடை ஏற்றுமதியாளர்களைச் சந்தித்தனர். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நடந்த கூட்டத்தில், தலைவர் சுப்பிரமணியன் வரவேற்றார். நிறுவன தலைவர் சக்திவேல், திருப்பூர் பின்னலாடை தொழில் மற்றும் ஏற்றுமதி வர்த்தக தொடர்புகள் குறித்து விளக்கினார்.
தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை செயலர் அர்ச்சனா பட்நாயக் பேசுகையில், ''ஆடை உற்பத்தியில், தமிழகத்தின் அடையாளமாக திருப்பூர் திகழ்கிறது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளம் பெற வேண்டும்; வேலைவாய்ப்பு பெருக வேண்டும் என்ற நோக்கில், மானிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன,'' என்றார்.
மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை செயலர் தாஸ் பேசியதாவது:
நாட்டின் வளர்ச்சியிலும், பொருளாதார மேம்பாட்டிலும், ஜவுளி ஏற்றுமதி முக்கிய பங்கு வகிக்கிறது. உலக அளவிலான ஏற்றுமதி வர்த்தகத்தில், இந்தியாவின் பங்களிப்பு உயர வேண்டும் என்பதே அரசின் நோக்கம். நாட்டின் பொருளாதார கட்டமைப்பில், 35 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலாவணி ஈட்டும் திருப்பூர் முக்கிய இடத்தில் இருக்கிறது.
தொழில் வளர்ச்சி நோக்கமாக இருந்தாலும், சுற்றுச்சூழல் பாதிக்காமல் இயங்க வேண்டியதும் அவசியம். செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி தொழில்நுட்பத்தை அரசு மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்படும்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களில், தமிழகம் முன்னோடி மாநிலமாக இருக்கிறது. குறிப்பாக, பசுமை சார் ஜவுளி உற்பத்தியும் வளர்ச்சி பெற்றுள்ளது. திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதிக்கு, பிரகாசமான மற்றும் பசுமையான எதிர்காலம் இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.