ADDED : ஜூன் 21, 2024 01:58 AM

திருப்பூர்;'மரங்கள், நம் நுரையீரலுக்கு மேலானது; மரங்கள் இல்லாமல் நுரையீரலால் என்ன செய்ய முடியும்?' என்று கேட்கப்படுவதுண்டு.
திருப்பூர், ெஷரீப் காலனி பகுதியில் ஏராளமான பசுமையான மரங்கள் ரோட்டின் இரு புறங்களிலும் வளர்ந்து பயன் தரும் வகையில் உள்ளது. இங்கு ஏராளமான குடியிருப்புகள் அமைந்துள்ளன.
இவற்றின் முன்புறம் நன்கு வளர்ந்து காட்சியளிக்கும் மரங்கள் நிழல் தரும் வகையில் உள்ளன.
இதில் ெஷரீப் காலனி புதுத் தோட்டம் பகுதியில், வீடுகளின் முன்புறம், நன்கு உயரமாக வளர்ந்த வேப்ப மரம் உள்ளிட்டவை உள்ளன.
இங்கு ரோட்டோரம் இருந்த நான்கு வேப்ப மரங்களின் கிளைகள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன. இவற்றின் பிரதான நடுத்தண்டு பகுதி மட்டும் மரத்துக்கு சாட்சியாக நிற்கிறது. கடந்த சில மாதம் முன், அதே பகுதியில் இது போல் நன்கு வளர்ந்த வேப்ப மரம் முழுமையாக அனைத்து கிளைகளும் வெட்டி அகற்றப்பட்ட மொட்டையாக நின்றது.
அதன் மீது ஆசிட் போன்ற ஏதோ ஒரு திரவம் ஊற்றப்பட்டதாகத் தெரிகிறது. பல மாதங்களாகியும் அந்த மரம் தொடர்ந்து பசுமையாக தழைக்காமல் வெறுமென மரத்துண்டாக நிற்கிறது. அதே பகுதியில் மேலும் சில மரங்கள் முழுமையாக கிளைகள் வெட்டி போடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற் படுத்துவதாக உள்ளது.