/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ராஜவாய்க்காலில் அடைப்பு... மூளிக்குளம் வறண்டது! ராஜவாய்க்காலில் அடைப்பு... மூளிக்குளம் வறண்டது!
ராஜவாய்க்காலில் அடைப்பு... மூளிக்குளம் வறண்டது!
ராஜவாய்க்காலில் அடைப்பு... மூளிக்குளம் வறண்டது!
ராஜவாய்க்காலில் அடைப்பு... மூளிக்குளம் வறண்டது!
ADDED : ஜூன் 01, 2024 11:25 PM

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சியின் கிழக்கு எல்லையில், மூளிக்குளம் உள்ளது. 26 ஏக்கர் பரப்புள்ள குளத்துக்கு, அணைக்காடு பகுதியில் உள்ள நொய்யல் தடுப்பணையில் இருந்து, ராஜவாய்க்கால் வழியாக தண்ணீர் செல்கிறது.
கடந்தாண்டு நொய்யலில் தண்ணீர் வராததால், குளம் வறண்டு காணப்படுகிறது. 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்திலும், நெடுஞ்சாலைத்துறை திட்டத்திலும், இவ்விரண்டு இடங்களில் பணிகள் துவங்கியதால், கடந்தாண்டு ராஜவாய்க்கால் துண்டிக்கப்பட்டது.
அணைக்காடு, தடுப்பணையில் இருந்து, ராஜவாய்க்காலுக்கு தண்ணீர் வரும் இடத்தில், நொய்யல் ஆற்றின் ஓரமாக சாக்கடை கால்வாய் கட்டுமானம் நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக பணிகள் கைவிடப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால், அணையில் இருந்து வாய்க்காலுக்கு தண்ணீர் வருவது தடைபட்டுள்ளது. இரண்டாவதாக, ராக்கியாபாளையம் பாலம் அருகே, நெடுஞ்சாலைத்துறை பணியால், ராஜவாய்க்கால் துண்டிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி நிர்வாகம் மற்றும் வேர்கள் அமைப்பு சார்பில், குளம் பராமரிக்கப்படுகிறது. சென்னையில் உள்ள தனியார் நிறுவனம், வேலி அமைத்து கொடுத்தது; மாநகராட்சி சார்பில், 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபாதை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டன.
கடந்த வாரம் மழை காரணமாக, மிதமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போதும், குளத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட சென்று சேராததால் வறண்டு காணப்படுகிறது. கோடை பருவத்தில் தவறவிட்டாலும் பரவாயில்லை.
தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவங்களில் வரும் ஆற்றுநீரை, குளத்தில் நிரப்பி, நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டுமென, வேர்கள் அமைப்பு செயல்பட்டு வருகிறது.
ராஜவாய்க்கால் முழுவதையும் துார்வாரி சுத்தம் செய்ய தயாராக இருக்கின்றனர். இருப்பினும், இரண்டு இடங்களில் கிடப்பில் போட்டுள்ள பணியை முடித்து கொடுத்தால் மட்டுமே, ராஜவாய்க்கால் வழியாக, நொய்யல் ஆற்றில் இருந்து தண்ணீரை குளத்துக்கு கொண்டு செல்ல முடியும்.
எனவே, மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை கொடுத்து, கிடப்பில் போடப்பட்டுள்ள பணிகளை விரைந்து முடித்து, குளத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.