Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மக்களின் வங்கி கணக்கு பயன்படுத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி சைபர் கிரைம் போலீஸ் விசாரணையில் அம்பலம்

மக்களின் வங்கி கணக்கு பயன்படுத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி சைபர் கிரைம் போலீஸ் விசாரணையில் அம்பலம்

மக்களின் வங்கி கணக்கு பயன்படுத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி சைபர் கிரைம் போலீஸ் விசாரணையில் அம்பலம்

மக்களின் வங்கி கணக்கு பயன்படுத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி சைபர் கிரைம் போலீஸ் விசாரணையில் அம்பலம்

UPDATED : ஜூலை 24, 2024 01:56 AMADDED : ஜூலை 23, 2024 09:36 PM


Google News
Latest Tamil News
திருப்பூர்:திருப்பூரில், 'டாஸ்க்' முறையில் முதலீடு செய்தால், அதிக கமிஷன் கிடைக்கும் என கூறி, 17 லட்சத்து, 29 ஆயிரத்தை மோசடி செய்த, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூரை சேர்ந்த, 30 வயது வாலிபருக்கு சமீபத்தில் 'வாட்ஸ் அப்' எண்ணுக்கு, 'பார்ட் டைம்' வேலை குறித்து 'மேப் ரிவ்யூ' செய்து 'ரேட்டிங்' கொடுத்தால் கமிஷன் கிடைக்கும் என்றும், 'டாஸ்க்' முடிக்க முதலீடு செய்தால், பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என்று தகவல் வந்தது.

இதனை நம்பிய வாலிபர், 17 லட்சத்து, 29 ஆயிரத்தை முதலீடு செய்தார். ஆனால், தான் ஏமாற்றப்பட்டது தெரிந்து, திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி, எஸ்.ஐ., ரபீக் தலைமையிலான போலீசார், கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் விசாரணை நடத்தினர்.

அதில், திருப்பூர் வாலிபர் பணம் அனுப்பிய வங்கி கணக்கு, கோவையை சேர்ந்த அனுாப், 31 என்பவருக்கு சொந்தமானது தெரிந்தது. அவரிடம் விசாரித்ததில், கோவை, துடியலுாரை சேர்ந்த நஜூமுதீன், 40 மற்றும் கே.கே., புதுாரை சேர்ந்த இம்ரான் பாட்ஷா, 35, ரகுமான், 45 ஆகியோர் வாயிலாக வெளிநாட்டில் உள்ள மோசடி கும்பல்களுக்கு வங்கி விவரங்களை கொடுத்து, பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. நான்கு பேரையும் போலீசார் கைது செய்து, நான்கு மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.

வெளிநாட்டில்

இருந்து கைவரிசை

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:

கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற பகுதிகளில் மக்களின் ஏழ்மை நிலையை பயன்படுத்தி, அவர்களுக்கு, 500, ஆயிரம் ரூபாய் கொடுத்து, வங்கியில் கணக்குகளை துவக்கி, பின் அதனை மோசடி செய்ய பயன்படுத்தி வந்தனர். இம்ரான் பாட்ஷா, ரகுமான் ஆகியோர், வங்கி விபரம், ஏ.டி.எம்., கார்டு, சிம் கார்டு போன்றவற்றின் விவரங்களை பெற்று துபாய், கம்போடியா, சீனா நாடுகளில் உள்ள மோசடி கும்பல்களுக்கு நேரில் சந்தித்து கொடுத்து வந்தனர்.

போலீசாரிடம் சிக்கி கொள்ளாமல் இருக்க, மக்களிடம் பொய்யான சில காரணங்களை கூறி, வங்கி கணக்குகளை துவக்க வைத்து, மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிந்தது. இதுதொடர்பாக, தொடர்ந்து விசாரணை நடக்கிறது. மோசடியில் பலரும் பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்துள்ளது தெரிய வந்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

400 வங்கி கணக்கு துவக்கம்


ரகுமான் பாட்ஷா, இம்ரான் ஆகியோர் கோவை மாவட்டத்தில் மட்டும் மக்களிடம் பல்வேறு காரணங்களை கூறி, 400 வங்கி கணக்குகளை மோசடிக்கு பயன்படுத்த துவக்கி உள்ளனர். அதில், ஒவ்வொரு கணக்கிலும், 20, 50 லட்சம் என, கோடிக்கணக்கில் பணம் பரிமாற்றம் நடந்துள்ளது. எனவே, வங்கி கணக்குகளை புதியதாக உருவாக்கி தருமாறு யாராவது அணுகினால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.
தங்கள் பெயரில் உள்ள வங்கி கணக்குகளில் குற்றங்கள் நடைபெற்றால், சம்பந்தப்பட்ட நபர்களும் குற்ற செயலில் ஈடுபட்டதாக கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்று யாராவது உங்களை ஏமாற்றி வங்கி கணக்குகளை திறந்திருந்தால் போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us