/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அமராவதி சர்க்கரை ஆலை கரும்பு பிரிவு அலுவலர்கள் கூண்டோடு இடமாற்றம் மூடு விழா திட்டம் என விவசாயிகள் ஆவேசம் அமராவதி சர்க்கரை ஆலை கரும்பு பிரிவு அலுவலர்கள் கூண்டோடு இடமாற்றம் மூடு விழா திட்டம் என விவசாயிகள் ஆவேசம்
அமராவதி சர்க்கரை ஆலை கரும்பு பிரிவு அலுவலர்கள் கூண்டோடு இடமாற்றம் மூடு விழா திட்டம் என விவசாயிகள் ஆவேசம்
அமராவதி சர்க்கரை ஆலை கரும்பு பிரிவு அலுவலர்கள் கூண்டோடு இடமாற்றம் மூடு விழா திட்டம் என விவசாயிகள் ஆவேசம்
அமராவதி சர்க்கரை ஆலை கரும்பு பிரிவு அலுவலர்கள் கூண்டோடு இடமாற்றம் மூடு விழா திட்டம் என விவசாயிகள் ஆவேசம்
ADDED : ஜூலை 28, 2024 02:54 AM

உடுமலை:திருப்பூர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில், 1960ல் துவக்கப்பட்ட அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை, தமிழகத்தில் முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலை.
திருப்பூர், கோவை, திண்டுக்கல் மாவட்டத்தில், 18,000 விவசாயிகளை அங்கத்தினர்களாக கொண்டு இந்த ஆலை செயல்பட்டது.
மேலும், ஆண்டுக்கு 10 மாதங்கள் இயக்கம், 10,000 ஏக்கர் பதிவு, 4 லட்சம் டன் கரும்பு அரவை, 4.60 லட்சம் குவிண்டால் சர்க்கரை உற்பத்தி என, இயங்கி வந்தது. மேலும், துணை ஆலையாக எரிசாராய உற்பத்தி ஆலையும் உள்ளது.
நிர்வாக குளறுபடிகள்
பழமையான இயந்திரங்கள், நிர்வாக குளறுபடிகள் காரணமாக ஆலை இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
தேய்மானமடைந்த இயந்திரங்களால், சில ஆண்டுகளாக, ஆலை அரவை படிப்படியாக குறைந்து, கடந்தாண்டு முற்றிலும் முடங்கியது.சர்க்கரை ஆலையை முழுமையாக புதுப்பிக்க, 86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கக் கோரி விவசாயிகள் பல ஆண்டுகளாக போராடுகின்றனர்.
நடப்பு பருவத்தில் பாதிப்பதை தடுக்க, கரும்பு பதிவு செய்ய விவசாயிகள் வலியுறுத்தினர். அதன் அடிப்படையில், திருப்பூர் கலெக்டர், ஆலைக்கு கரும்பு பதிவு செய்ய கடந்த மாதம் உத்தரவிட்டார்.
இந்நிலையில், திடீரென கரும்பு பெருக்க அலுவலர், கரும்பு அலுவலர்கள் என ஏழு பிரிவுகளிலிருந்து, ஊழியர்களை மொத்தமாக இடமாற்றம் செய்து சர்க்கரைத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
ஆலைக்கு ஆதாரமாக உள்ள இப்பிரிவு முழுதும் காலியானதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் பாலதண்டபாணி கூறியதாவது:
ஆலை புதுப்பிக்க நிதி மற்றும் அதை ஆறு ஆண்டுகளில் திரும்ப செலுத்தும் வகையில் திட்ட அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இரு ஆண்டுகளாக, பல கட்ட போராட்டங்கள் நடத்தியும், அரசும், அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை.
250 ஏக்கர் பதிவு
அமராவதி சர்க்கரை ஆலை கட்டுப்பாட்டு பகுதி நிலங்களில், நீர்வடியும் தன்மை குறைவு. இதனால், கரும்பு, நெல் தவிர வேறு பயிர்கள் சாகுபடி செய்ய முடியாது.
ஆலையை மீண்டும் இயக்கவும், கரும்பு விலை சரிவால் விவசாயிகள் பாதிப்பதை தடுக்கவும், அமராவதி சர்க்கரை ஆலை வாயிலாக, கரும்பு பதிவை வழக்கம் போல் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தற்போது, 250 ஏக்கர் வரை பதிவு செய்யப்பட்ட நிலையில், திடீரென கரும்பு பிரிவு அலுவலர்கள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்தாண்டு ஆலை இயங்காவிட்டாலும், அரசு நிர்ணயித்த ஆதார விலைக்கு மற்ற அரசு ஆலைகளுக்கு, கரும்பு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது, ஆலை பதிவு செய்யவில்லை என்றால், தனியார் ஆலைகள் கேட்கும் விலைக்கு கரும்பை விற்க நேரிடும்.
இதை, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மூடும் நடவடிக்கையாக கருதுகிறோம். வெளிநாடுகளுக்கு சென்று தொழில் முதலீடு ஈர்க்கும் முதல்வர், உள்ளூரில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கும் ஆலையை மூடுவது, வினோதமாக உள்ளது.
ஆலையை புதுப்பிக்க உடனடியாக நிதி ஒதுக்கி, கரும்பு பதிவை மேற்கொள்ள வேண்டும். இதனை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.
இவ்வாறு கூறினார்.