/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஜவுளித்துறைக்கு ரூ.3.66 லட்சம் கோடி ஒதுக்கீடு தொழில்நுட்ப ஜவுளி மேம்பாட்டில் கூடுதல் கவனம் ஜவுளித்துறைக்கு ரூ.3.66 லட்சம் கோடி ஒதுக்கீடு தொழில்நுட்ப ஜவுளி மேம்பாட்டில் கூடுதல் கவனம்
ஜவுளித்துறைக்கு ரூ.3.66 லட்சம் கோடி ஒதுக்கீடு தொழில்நுட்ப ஜவுளி மேம்பாட்டில் கூடுதல் கவனம்
ஜவுளித்துறைக்கு ரூ.3.66 லட்சம் கோடி ஒதுக்கீடு தொழில்நுட்ப ஜவுளி மேம்பாட்டில் கூடுதல் கவனம்
ஜவுளித்துறைக்கு ரூ.3.66 லட்சம் கோடி ஒதுக்கீடு தொழில்நுட்ப ஜவுளி மேம்பாட்டில் கூடுதல் கவனம்
ADDED : ஜூலை 27, 2024 11:47 PM

திருப்பூர்;மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுள்ள, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 7வது முறையாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். நாட்டின் ஜவுளித்துறை மேம்பாட்டுக்காக, மூன்று லட்சத்து, 66 ஆயிரத்து, 611 கோடி ரூபாய் அளவுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
'பி.எல்.ஐ., -2.0' திட்டம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட 'ஏ-டப்' திட்டம் தொடர்பான அறிவிப்புகள் இல்லாதது, வங்கதேச ஆடை இறக்குமதிக்கான கட்டுப்பாடு விதிக்கப்படாதது போன்ற சில எதிர்பார்ப்புகளில் ஏமாற்றம் மிஞ்சியுள்ளது. இருப்பினும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான அறிவிப்புகளும், தொழிலாளர் வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
நடப்பு (2024- ---25) பட்ஜெட்டில், ஜவுளித்துறைக்கான ஒதுக்கீடு, 7,792 கோடி ரூபாய் அதிகரித்து, மூன்று லட்சத்து, 66 ஆயிரத்து, 611 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜவுளித் துறையில் ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டுக்காக, 31 ஆயிரத்து, 920 கோடி ரூபாயாக இருந்தது, 57 ஆயிரத்து, 600 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
'டெக்னிக்கல் டெக்ஸ்டைல்'
தோல் மற்றும் ஜவுளி ஏற்றுமதி வர்த்தகத்தில், போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்காக, சுங்க வரியில் சில சலுகைகள் வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில், 14 ஆயிரத்து, 700 கோடி ரூபாயாக இருந்த, தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தின் ஒதுக்கீடு, 31 ஆயிரத்து, 500 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
செயல்திறன் மற்றும் செயல்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்ப ஜவுளிகள், கட்டுமானம், விவசாயம், விண்வெளி, வாகனம், சுகாதாரம், பாதுகாப்பு கியர் மற்றும் வீட்டு பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன.
பாரம்பரிய ஜவுளிகளைப் போல் இல்லாமல், அழகியலுக்கு முன்னுரிமை அளிக்கிறது. தொழில்நுட்ப ஜவுளிகள் சிறந்த செயல்திறனை வழங்குகின்றன. 'டெக்னிக்கல் டெக்ஸ்டைல்' என்ற தொழில்நுட்ப ஜவுளி பிரிவில், ஏராளமான தொழில் வாய்ப்புகள் உள்ளன.
ரூ.80 ஆயிரம் கோடி இலக்கு
அதன்படி, செயற்கை நுாலிழைகள் மூலமாக, இவ்வகை ஆடைகள் உற்பத்தி ஊக்குவிக்கப்படுகிறது. நாட்டில், 21 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப ஜவுளி ஏற்றுமதி நடக்கிறது. சர்வதேச அளவில், 170 நாடுகளில், தொழில்நுட்ப ஜவுளிகளுக்கான தேவைகள் அதிகரித்துள்ளன.
அதனால், மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப ஜவுளி ஏற்றுமதி, அடுத்த ஐந்து ஆண்டுகளில், 80 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கைவினை பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்க, கைவினை கலைஞர்கள் திறன் மேம்பாட்டு திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய கைவினைப் பொருட்களை, புதிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கும் முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன.
பட்டு ஜவுளிக்கு ரூ.75 ஆயிரம் கோடி
பட்டு ஜவுளி உற்பத்திக்காக, 75 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உலகின் இரண்டாவது பெரிய பட்டு உற்பத்தியாளராக இருக்கும் இந்தியாவில், 92 லட்சம் பேர் நேரடியாக பட்டு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். உள்நாட்டு தேவைகள் அதிகரித்ததால், பட்டு ஜவுளி உற்பத்தியும், இறக்குமதி சார்ந்ததாக மாறியுள்ளது.
பல திட்டத்துக்கு ரூ.3.25 லட்சம் கோடி
பல்வேறு வகையான மத்திய அரசு திட்டங்கள் வாயிலாக, நாட்டின் ஜவுளி வர்த்தகம் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மித்ரா திட்டம், கைத்தறி பாதுகாப்பு திட்டம், மூலப்பொருள் வழங்கும் திட்டம் போன்ற மத்திய அரசு திட்டங்களுக்கான மொத்த ஒதுக்கீடு, 3.25 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.