/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ விளையும்போதே முளைத்த சேமிப்பு பழக்கம் விளையும்போதே முளைத்த சேமிப்பு பழக்கம்
விளையும்போதே முளைத்த சேமிப்பு பழக்கம்
விளையும்போதே முளைத்த சேமிப்பு பழக்கம்
விளையும்போதே முளைத்த சேமிப்பு பழக்கம்
ADDED : ஜூன் 02, 2024 12:51 AM

''நாங்க கூலி வேலைக்கு போறவங்க; வாரா வாரம் சம்பளம் வாங்குவோம். என் பையன், அஞ்சாம் வகுப்பு தான் படிக்கிறான். என் சம்பள பணத்தை வாங்கி, அந்த பணத்தை எது, எதுக்கு செலவு பண்ண ணும்ன்னு கேட்டு, பிரிச்சு வச்சிக்கிறான். அவன் போடுற குடும்ப 'பட்ஜெட்'ட பார்க்கும் போது, எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு; வாழ்க்கையில நல்ல நிலைமைக்கு வருவான்ங்கற நம்பிக்கை வருது...''
ஆரம்பக்கல்வி படிக்கும் தன் பிள்ளைகளை குறித்து, இப்படியாக பெருமை பேசுகின்றனர், சேவூர் அருகேயுள்ள மங்கரசவலையபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்.''இந்த சின்ன வயசுல எப்படி நிதி மேலாண்மை எண்ணம் வந்தது?' நாம் கேள்வியெழுப்பிய போது, பள்ளியில் செயல்படுத்தப்படும் 'சேமிப்பு திட்டம்' தான் என்றனர் பெற்றோர்.
சேமிக்க துவங்கியமாணவர்கள்
சேமிப்பு திட்டம் குறித்து விவரித்தார், பள்ளி தலைமையாசிரியர் சூரியபிரகாஷ்:
''2013ல் இந்த பள்ளி தலைமையாசிரியராக சேர்ந்தேன். அப்போதில் இருந்தே பள்ளி வளர்ச்சிக் குழு, பெற்றோர் ஆசிரியர் குழு அமைத்து, பள்ளிக் குழந்தைகள் நலன் சார்ந்த ஆலோசனைகளை நடத்துவோம். அது சம்பந்தமா சில தீர்மானங்களையும் நிறைவேற்றினோம். அதில் ஒன்றுதான், 'சிறுவர் சேமிப்பு திட்டம்'' என, அறிமுகம் கொடுத்தார்.
பெற்றோர் முகத்தில் மகிழ்ச்சி
''ஒன்றாம் வகுப்பு துவங்கி, 5ம் வகுப்பு வரையுள்ள குழந்தைகள், ஒரு ரூபாயில் இருந்து, தங்களால் எவ்வளவு சேமிக்க முடியுமோ, அவ்வளவு தொகையை சேமிக்க துவங்கினாங்க. அவர்கள் தரும் தொகையை, வாரம் ஒரு முறை அவர்கள் பெயரில் துவங்கப்பட்டுள்ள வங்கிக்கணக்கில் வரவு வைத்து விடுவோம்.
அந்த தொகையை, இடையில் எடுக்க முடியாது. 5ம் வகுப்பு முடித்து, மாற்றுச்சான்றிதழ் வாங்கி அந்த மாணவன் பள்ளியை விட்டு செல்லும் போதுதான், அவன் சேமித்து வைத்த தொகையை வங்கிக் கணக்கில் இருந்து எடுத்து கொடுப்போம்.
ஐந்தாண்டு கல்வி பயின்ற திருப்தியோடு, தாங்கள் சிறுக சிறுக சேமித்து வைத்த பணத்தை மொத்தமாக வாங்கிச் செல்லும் போது, மாணவர்கள், அவர்களது பெற்றோர் முகத்தில், மகிழ்ச்சி கொப்பளிக்கும். சில பெற்றோர் அந்த தொகையை, அங்குள்ள தபால் அலுவலகத்தில், தங்கள் குழந்தைகள் பெயரிலேயே 'டெபாசிட்' செய்தும் உள்ளனர்.
இந்தாண்டு, 5ம் வகுப்பு முடித்து வெளியே செல்லும் மாணவன் கிருஷ்ணா, சேமிப்பு திட்டத்தில் அதிகபட்சம், 21 ஆயிரத்து10 ரூபாய் சேமித்து வைத்திருந்தார். அந்த தொகையை அவரிடம் கொடுத்து, வாழ்த்திவழியனுப்பினோம்.
இந்தாண்டு, 5ம் வகுப்பு முடித்து சென்ற, 15 மாணவர்களுக்கு, 96 ஆயிரத்து 500 ரூபாய், அவர்கள் சேமித்த தொகையை கொடுத்து, அனுப்பி வைத்திருக்கிறோம்.
இந்த சேமிப்பு பழக் கத்தால் தேவையற்ற தின்பண்டங்களை வாங்கி உண்பது, தேவையற்ற விஷயங்களுக்கு செலவழிப்பது போன்ற மனநிலையில் இருந்து மாணவர்கள் விடுபடுகின்றனர் என்பதை உணர முடிகிறது.இவ்வாறு, சேமிப்பு திட்டத்தின் பயனை விளக்கினார்.