Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஆடிப்பெருக்கில் கரைதொட்டு பாயும் ஆறு! அமராவதியில் நீர் வளம் பெருகியதால் உற்சாகம்

ஆடிப்பெருக்கில் கரைதொட்டு பாயும் ஆறு! அமராவதியில் நீர் வளம் பெருகியதால் உற்சாகம்

ஆடிப்பெருக்கில் கரைதொட்டு பாயும் ஆறு! அமராவதியில் நீர் வளம் பெருகியதால் உற்சாகம்

ஆடிப்பெருக்கில் கரைதொட்டு பாயும் ஆறு! அமராவதியில் நீர் வளம் பெருகியதால் உற்சாகம்

ADDED : ஆக 03, 2024 06:06 AM


Google News
Latest Tamil News
உடுமலை: விவசாயத்திற்கு ஆதாரமாக உள்ள நீர் வழிபாடாக, ஆடிப்பெருக்கு தினத்தை,கொண்டாடும் கரையோர மக்கள், தற்போது அமராவதி ஆற்றில் இரு கரை தொட்டுச்செல்லும் வெள்ளத்தால் உற்சாகமடைந்துள்ளனர்.

அமராவதி ஆற்றின் கரையோர மக்கள், ஆடிப்பெருக்கு தினமாக, ஆடி -18ம் நாளை, பாரம்பரிய முறையில் கொண்டாடி வருகின்றனர். உழவுக்கும், உயிரினங்கள் வாழ ஆதாரமாக உள்ள, அமராவதி அன்னையை வணங்கும் வகையிலும், ஆண்டு முழுவதும் நீர் வளம் பெருக, நீர் வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர்.ஆடிப்பெருக்கு தினத்தன்று, நெல் உள்ளிட்ட தானியங்களில் முளைப்பாரி அமைத்து, வளர்ந்த அவற்றை, ஆற்றில் கொண்டு வந்து வைத்து, கன்னிமார் பூஜை நடத்தி, ஆற்றுக்கு படையலிட்டு வணங்கி வருகின்றனர்.

புதுமணப்பெண்கள் தாலிச்சரடு மாற்றியும், உற்றார், உறவினர்களுடன் இணைந்து, உற்சாகமாக கொண்டாடும், இவ்விழாவிற்கு, அமராவதி கரையோர கிராமங்களில் மக்கள் தயாராகி வருகின்றனர்.

நடப்பாண்டு, பருவ மழை பெய்து, அணை நிரம்பி அமராவதி ஆற்றின் இரு கரை தொட்டு வெள்ள நீர் ஓடி வருகிறது.

இதனால், நடப்பாண்டு விவசாயம் செழிக்கும் என, கரைவழி கிராமங்களில் உள்ளோர் மகிழ்சியோடு, ஆடிபெருக்கு விழாவை கொண்டாட தயாராகி வருகின்றனர். உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தைச்சேர்ந்த அருட்செல்வன், சிவக்குமார் ஆகியோர் கூறியதாவது:

நீரின்றி அமையாது உலகு என்பதற்கு சான்றாக, நீர் வழிபாட்டினை வலியுறுத்தும் வகையில், உழவர்களின் விழாக்களும், கொண்டாட்டங்களும் பல நுாறு ஆண்டுகளாக உள்ளது.

தென்கொங்கு நாட்டின் 'ஆன்பொருநை' நதியான அமராவதி நதியின், அணையில் அமராவதி அம்மன் என்ற பெயரில் நதி வணங்கப்படுகிறது.

ஆடி மாதம் என்பது உழவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் மாதமாகும். 'ஆடிப்பட்டம் தேடி விதை' என்பது போல், இந்த நாளில், நவதானியங்களைக்கொண்டு மண்பாண்டங்களில் முளைக்க வைக்கப்பட்ட 'முளைப்பாரி' எனப்படும் செழிப்பான செடிக்கொத்துக்களை ஆற்றில் விட்டு, தங்களது விவசாயத்தை உற்சாகமாக துவக்குவார்கள்.

இந்த முளைப்பாரியை உழவர் வீட்டுப்பெண்கள், ஒவ்வொருவரும் தலையில் தூக்கிக்கொண்டு நாட்டுப்புறப்பாடல்கள் பாடிக்கொண்டு உழவையும், தொழிலையும் வந்தனை செய்து ஆடிப்பெருக்கு விழாவாக, ஆடி - 18ம், நாளைக்கொண்டாடுகிறார்கள்.

அமராவதி வழியோர கிராமங்களில், இன்றளவும் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது.

அறிவியல் பூர்வமாக விதைகளின் வீரியத்தை உறுதி செய்வதற்காக, முளைப்பாரி முறையை உழவர்கள் தொன்று தொட்டு பாரம்பரியமாக உபயோகப்படுத்தி வருவதை இதன் வாயிலாக உணர்ந்து கொள்ளலாம்.

இவ்வாறு, தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us