ADDED : ஜூலை 31, 2024 01:00 AM

திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சி பகுதியில், மழை நீர் வடிகால்களில் தேங்கிக் கிடக்கும் பாலிதீன் கழிவுகள், பெரிய பிரச்னையாக மாறி வருகிறது.
திருப்பூர் மாநகராட்சியில், பல பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பிரதான ரோடுகளில் மழை நீர் வடிகால், குறுகலான வீதிகளில் திறந்த நிலை கழிவு நீர் வடிகால்களும் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
திறந்த நிலையில் உள்ள மழை நீர் மற்றும் கழிவுநீர் வடிகால்கள் முக்கிய கடை வீதிகள் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ளன. இவற்றில் பெரும்பாலான பகுதிகளில் மண் குவியல் நிறைந்தும், மக்காத குப்பைகழிவுகள் நிரம்பியும் காணப்படுகிறது.
இந்த இடங்களில் கழிவுநீர் செல்வது பெரும் பிரச்னையாக மாறி விட்டது. குறிப்பாக, மழை நாட்களில், மழை நீர் இதில் செல்ல வழியின்றி, ரோட்டில் பெருக்கெடுத்து ஓடுவதும், தாழ்வான பகுதியில் உள்ள கட்டடங்களில் புகுந்து அவதியை ஏற்படுத்துகிறது.
இதற்கு தீர்வு காணும் விதமாக, மழைக்காலம் துவங்கும் நிலையில், மழை நீர் வடிகால்கள் துார் வாரி சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வகையில், கால்வாய்களில், ஒரு முறை பயன்படுத்தி வீசப்படும் பாலிதீன் கவர்கள், டம்ளர், தட்டுகள் ஆகியனவும், பிளாஸ்டிக் குடிநீர், குளிர்பான பாட்டில்களும் குவிந்து கிடக்கிறது.
குறிப்பாக, பேக்கரி, ஓட்டல் உள்ள இடங்களில், அதிகம் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளன. இதனை தவிர்க்க கடை உரிமையாளர்கள், பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்க குப்பை தொட்டிகள் பயன்படுத்த வேண்டும்.
இதுதவிர, டாஸ்மாக் பார்களில் ஒன் யூஸ் டம்ளர் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு பாரிலும் இவ்வாறு, பல நுாற்றுக்கணக்கான டம்ளர், தட்டுகள், சாக்கடை கால்வாயில் தான் வீசப்படுகின்றன.
மாநகராட்சி சுகாதாரப் பிரிவினர் இது குறித்து, அறிவுறுத்தி, கடைகளில் தொடர்ந்து கண்காணிப்பும் மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களும், மக்காத கழிவுகளை மழை நீர் வடிகால்களில் எறிவதை தவிர்க்க வேண்டும்.