/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தன்னம்பிக்கை சிறகு விரிந்தால் கைகூடும் சாதனை தன்னம்பிக்கை சிறகு விரிந்தால் கைகூடும் சாதனை
தன்னம்பிக்கை சிறகு விரிந்தால் கைகூடும் சாதனை
தன்னம்பிக்கை சிறகு விரிந்தால் கைகூடும் சாதனை
தன்னம்பிக்கை சிறகு விரிந்தால் கைகூடும் சாதனை
ADDED : ஜூன் 02, 2024 12:55 AM

வழக்கமாக, வாலிபால் போட்டியில், எல்லைக் கோட்டில் இருந்து பந்தை மூன்று முதல் நான்கடி துாரத்துக்கு துாக்கி எறிந்து, வீரர் இரண்டு அடி உயரத்துக்கு குதித்து, ஓங்கியடித்து, பந்தை 'சர்வீஸ்' செய்வதை தான் பாத்திருப்போம். ஆனால், மாற்றுத்திறனாளிகள் வாலிபால் போட்டியில் எல்லாமே வித்தியாசமான அனுபவமாக இருந்தது.
திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரி மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் நடந்த மாநில அளவிலான இப்போட்டி, விளையாட்டு ரசிகர்களை உற்சாகமடைய செய்ததோடு வியப்பிலும் ஆழ்த்தியது.
விளையாடிய வீரர்கள் ஒரு கை, ஒரு கால் செயல் இழந்தவர் என்பதால், சர்வீஸ் எல்லைக்கோட்டுக்கு, தவழ்ந்து தான் செல்ல வேண்டும் (ஆட்ட விதிமுறையும் அப்படித்தான்). வீரர் நின்ற நிலையில் விளையாட கூடாது.
'இதெல்லாம் எங்களுக்கு ஒரு பிரச்னையே இல்லை'யென 'டி-சர்ட்' காலரை துாக்கிக் கொண்ட வீரர்கள் சர்வ சாதாரணமாக எதிரணியின் அதிரடி சர்வீஸ்களை எதிர்கொண்டு, மூன்று 'டச்'களுக்கு பின் பந்தை திருப்பி அனுப்பி வெற்றி புள்ளியாகவும் மாற்றினர். அசத்திய வீரர்கள், வெற்றியை ருசித்ததும், ஒருவரையொருவர் ஆரத்தழுவிக்கொண்டனர்.
போட்டி முடிந்து பரிசு, பாராட்டு பெற்ற பின் சக்கர நாற்காலியில் சந்தோஷமாக தொடர்ந்தது, அவர்களது பயணம்.
திருப்பூரில் இதுபோன்ற போட்டிகள் நடத்தும் போது, பார்வையாளர்கள் பலரையும் பார்க்க ஏற்பாடு செய்தால், திறமை மிக்க மேலும் பல மாற்றுத்திறன் வீரர்கள் உருவாவர்; தன்னம்பிக்கை என்பது உடலில் இல்லை; உள்ளத்தில் தான் உள்ளது என்பதை உணர வைத்த இதுபோன்ற போட்டிகளை காண ரசிகர்கள் அதிகளவில் பங்கேற்காதது சற்று வருத்தமளித்தது.
எதுவாக இருந்தாலும், மனம் தளராமல் நடப்பதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை, மாற்றுத்திறனாளி வீரர்களிடம் நாம் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டும். கரங்கள் கட்டப்பட்டால் என்ன? தன்னம்பிக்கைச் சிறகுகள் பறக்கத் துடிக்கும் அல்லவா!