/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'இயற்கை சார்' சாயமிடலில் முத்திரை பதிக்கும் நிறுவனம் 'இயற்கை சார்' சாயமிடலில் முத்திரை பதிக்கும் நிறுவனம்
'இயற்கை சார்' சாயமிடலில் முத்திரை பதிக்கும் நிறுவனம்
'இயற்கை சார்' சாயமிடலில் முத்திரை பதிக்கும் நிறுவனம்
'இயற்கை சார்' சாயமிடலில் முத்திரை பதிக்கும் நிறுவனம்
ADDED : ஜூன் 16, 2024 12:48 AM

திருப்பூர்:மத்திய அரசின், 'ஸ்டார்ட் அப்' திட்டத்தின் மூலமாக, ஈரோட்டை சேர்ந்த நிறுவனம், பூக்கள் மற்றும் இலைகளை கொண்டு சாயமிடும் இயற்கை சார் சாயமிடலில் வெற்றி கண்டிருக்கிறது.
மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலுடன், 'அடல் இன்குபேஷன்' மையம், நாடு முழுவதும் இயங்கி வருகிறது. தமிழகத்தின் மேற்கு மண்டலத்துக்கான மையம், 'நிப்ட்-டீ' கல்லுாரியுடன் இணைந்து, கல்லுாரி வளாகத்தில் இயங்கி வருகிறது.
'ஸ்டார்ட் அப்' திட்டத்தில், புதிய தொழில் துவங்குவோரை கண்டறிந்து, அரசு மானிய உதவியை பெற்றுத்தருவது இம்மையத்தின் முக்கிய பணி. அதுமட்டுமல்ல, புதிய கோணத்தில் முத்திரை பதிக்கும் தொழில்முனைவோருக்கு, தேவையான தொழில்நுட்ப வழிகாட்டுதல்களையும் வழங்கி ஊக்குவிக்கிறது.
அதன்படி, பத்து ஆண்டுகளாக இயற்கையான முறையில் சாயமிட்ட துணிகளில் ஆடை தயாரித்து கொண்டிருந்த நிறுவனத்தை, 'ஸ்டார்ட் அப்' திட்டத்தின் வாயிலாக, குழந்தைகளுக்கான ஆடை தயாரிப்பிலும், பூக்கள் மற்றும் இலைகளை கொண்டு சாயமிடும் தொழில்நுட்பத்திலும் முன்னோடியாக மாற்றியுள்ளது, 'அடல் இன்குபேஷன்' மையம்.
சாதனை புரிந்த'ஸ்டார்ட் அப்'
மாயவன் பொட்டானிகஸ் நிறுவனம், 100 சதவீதம் ஆர்கானிக் பருத்தி பஞ்சு வழியாக துணியை உற்பத்தி செய்கிறது. கருங்குவளை மலர், செங்காந்தள் மலர், இலை, தழைகளை கொண்டு இயற்கையாக சாயமிடும் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக செய்து வருகிறது.
பூக்கள், இலை, தழை மற்றும் இயற்கையான பொருட்களை கொண்டு, பஞ்சு, நுால், துணி மற்றும் ஆடைகள் என, அனைத்து நிலைகளிலும் வெற்றிகரமாக சாயமேற்றி சாதனை படைத்துள்ளனர்.
இதுகுறித்து மாயவன் பொட்டானிகஸ் தொழில்நுட்ப இயக்குனர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''ஸ்டார்ட் அப்' திட்டத்தில், ஓராண்டாக, இயற்கை சார் சாயமிடல் தொழில்நுட்பத்தை செயல்படுத்தியுள்ளோம். முதல்கட்டமாக, ஏழு லட்சம் ரூபாய் அரசு மானியம் கிடைத்தது. அடுத்ததாக, 'நிப்ட்-டீ' அடல் இன்குபேஷன்' மையம் வாயிலாக, 25 லட்சம் ரூபாய் மானியம் பெறுவதற்கான பணிகளை செய்து வருகிறோம்,'' என்றார்.
புதிய ஐடியாவுக்கு வரவேற்பு!
'நிப்ட்-டீ' அடல் இன்குபேஷன் மைய முதன்மை செயல் அலுவலர் செந்தில்குமார் கூறுகையில், ''புதிய கோணத்தில் தொழில் செய்ய விரும்பும் தொழில் முனைவோர், மையத்தை அணுகினால், அரசு மானியத்தை பெற்றுக்கொடுத்து, தொழில் துவங்க வழிகாட்டுதல் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, 96774 95111 என்ற எண்களில் அணுகலாம்,'' என்றார்.