/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'போதை' கொலைகள் தொடரும் 'ரத்த வெறி' : தவிக்கும் சமுதாயம் 'போதை' கொலைகள் தொடரும் 'ரத்த வெறி' : தவிக்கும் சமுதாயம்
'போதை' கொலைகள் தொடரும் 'ரத்த வெறி' : தவிக்கும் சமுதாயம்
'போதை' கொலைகள் தொடரும் 'ரத்த வெறி' : தவிக்கும் சமுதாயம்
'போதை' கொலைகள் தொடரும் 'ரத்த வெறி' : தவிக்கும் சமுதாயம்
ADDED : ஜூன் 25, 2024 02:37 AM

திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்தில், கடந்த வாரத்தில் மட்டும் மது போதையால், மூன்று கொலைகள் நடந்துள்ளன. போதையால் ஏற்படும் தகராறுகள், குற்றங்களைக் களைவது போலீசாருக்கு பெரும் சவாலாக உள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும், திருப்பூர் மாநகரில் ஒன்று; புறநகரில், இரண்டு என, மூன்று கொலைகள் நடந்தன. மூன்றும், மதுபோதையின் போது ஏற்பட்ட பிரச்னைகளை மையம் கொண்டதாக அமைந்தது.
* கடந்த 18ம் தேதி திருப்பூர், கோல்டன் நகர், கருணாகரபுரி நகர் முதல் வீதியை சேர்ந்தவர் சதீஷ்குமார், 30; பனியன் தொழிலாளி. வீட்டுக்கு அருகே பேக்கரிக்கு வெளியே நண்பர் சிலருடன் அமர்ந்திருந்தார். டூவீலரில் வந்த, ஐந்து பேர் கொண்ட கும்பல் வாலிபரை சராமரியாக வெட்டி கொன்றனர். நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், நண்பர்களுடன் மது அருந்திய போது, சதீஷ்குமார் எழுந்தார். அப்போது மற்றொரு நண்பர் சாப்பிட்டு கொண்டிருந்த பிரியாணியில் மண் விழுந்தது தொடர்பாக கொலை நடந்தது தெரிந்தது.
* திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 21. விருதுநகரை சேர்ந்தவர் மாரிசெல்வம், 28. இவரும், திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள காற்றாலை நிறுவனத்தில் தங்கி வேலை செய்து வந்தனர். கடந்த, 16ம் தேதி நள்ளிரவில் மதுபோதையில் ஏற்பட்ட பிரச்னையில், சந்தோஷ்குமாரை நாற்காலியால் தாக்கி மாரிசெல்வம் கொலை செய்தார்.
* ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மண்டோ, 21. திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லுார், பொங்குபாளையத்தில் தங்கி வேலை செய்து வந்தார். கடந்த, 15 ம் தேதி மனைவியின் அண்ணன் கஜேந்திர தாரே, 29 என்பவருடன் மது அருந்தினார்.போதையில் இருவருக்குமிடையே பிரச்னை ஏற்பட்டது. தாக்குதலில் மண்டோ பலியானார்.
சீரழியும் வாழ்க்கை
அன்றாடம் மாநகரம், புறநகர் என, மதுபோதையால் 'டாஸ்மாக்' மதுக்கடை பாரில் தகராறு, பொது இடத்தில் மோதி கொள்வது என பொதுமக்களுக்கு போதை ஆசாமிகள் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றனர். தாங்கள் சீரழிவதோடு பொதுமக்களின் வாழ்க்கையையும் சீரழிக்கும் செயலில் இவர்கள் ஈடுபடுகின்றனர்.
குறிப்பாக, திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வலம் வரும் 'குடி'மகன்கள் அவ்வப்போது பொது இடத்தில் மோதி கொள்கின்றனர். வழிப்பறி கும்பல்களும் போதையில் இருப்பவர்களிடம் உடமைகளை பறிக்கும் போது தகராறு ஏற்படுகிறது. இப்பிரச்னைகளுக்கு போலீசார் தீர்வு ஏற்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
மதுக்கடைகளின் எண்ணிக்கையையாவது குறையுங்கள் என்று பின்னலாடை உற்பத்தியாளர்கள் கோரி வருகின்றனர். சமீபத்திய கள்ளச்சாராய மரணங்களும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூர் மாவட்டத்தில் மதுக்கடைகளின் எண்ணிக்கையையாவது முதற்கட்டமாக தமிழக அரசு குறைக்க வேண்டும்.