Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பத்தூர்/ திருப்பத்துார் பள்ளியில் நுழைந்த சிறுத்தை 11 மணி நேர போராட்டத்திற்கு பின் சிக்கியது

திருப்பத்துார் பள்ளியில் நுழைந்த சிறுத்தை 11 மணி நேர போராட்டத்திற்கு பின் சிக்கியது

திருப்பத்துார் பள்ளியில் நுழைந்த சிறுத்தை 11 மணி நேர போராட்டத்திற்கு பின் சிக்கியது

திருப்பத்துார் பள்ளியில் நுழைந்த சிறுத்தை 11 மணி நேர போராட்டத்திற்கு பின் சிக்கியது

ADDED : ஜூன் 15, 2024 11:23 PM


Google News
Latest Tamil News
திருப்பத்துார்:திருப்பத்துார், சாம நகரில் நேற்று முன்தினம் மாலை, 4:00 மணியளவில் சிறுத்தை ஒன்று மேரி இம்மாகுலேட் என்ற தனியார் பள்ளிக்குள் நுழைந்தது. நுழைவாயிலில் பெயின்ட் அடித்துக் கொண்டிருந்த வேலு, 47, என்பவரை தாக்கியது. அவர் தகவலின்படி, ஆசிரியர் மற்றும் மாணவியர் வகுப்பறைக்குள் கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டனர்.

வனத்துறையினர் அங்கு சென்று மாணவியரை பத்திரமாக மீட்டு, வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்ட போது, பக்கத்திலுள்ள கார் மெக்கானிக் ஷெட்டில் சிறுத்தை புகுந்தது. அப்போது, அங்கிருந்த நான்கு பேரும் ஒரு காரில் ஏறி பதுங்கினர். அவர்களை வனத்துறையினர் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில் மீட்டனர்.

சம்பவ இடத்தில் கலெக்டர் தர்ப்பகராஜ், எஸ்.பி., ஆல்பர்ட் ஜான், வனச்சரகர் சோழராஜன், வேலுார் மண்டல வன பாதுகாவலர் பத்மா, வனத்துறை மயக்கவியல் நிபுணர் சுகுமார் தலைமையில், 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மற்றும் போலீசார் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கார் ஷெட் கூரையை பிரித்து சிறுத்தை நடமாட்டத்தை கவனித்ததில், காருக்கு அடியில், தலையை மட்டும் வெளியே நீட்டிய படி சிறுத்தை படுத்திருந்தது. ஏணி வாயிலாக கார் ஷெட்டினுள், மயக்கவியல் நிபுணர் சுகுமார் உள்ளே இறங்கி, தரையில் ஊர்ந்து சென்று, சிறுத்தை தொடையின் பின்புறம் மயக்க ஊசியை செலுத்தினார். அந்த நேரத்தில் சிறுத்தை, 10 அடி உயரத்திற்கு மேல் ஆக்ரோஷமாக தாவியது.

வேகமாக பாய முடியாத நிலையில், ஷெட்டிலிருந்து வெளியே குதித்து பக்கத்து வீட்டின் குளியலறையில் சிறுத்தை புகுந்தது. பின், சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த சிறுத்தையை மீட்டு, வனத்துறையினர் கூண்டில் அடைத்தனர்.

பின்னர், நேற்று காலை, 6:00 மணி வரை அதன் உடல் நிலையை கண்காணித்ததில், நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பது தெரிந்தது. இதையடுத்து, தமிழக - ஆந்திர எல்லை வனப்பகுதியில் சிறுத்தை திறந்து விடப்பட்டது. அப்போது மின்னல் வேகத்தில் சிறுத்தை வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தது. இதையடுத்து, 11 மணி நேர மீட்பு போராட்டம் முடிவுக்கு வந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us