Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ துாத்துக்குடி விமான நிலையத்தில் புதிய முனையம் அக்டோபர் இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும்

துாத்துக்குடி விமான நிலையத்தில் புதிய முனையம் அக்டோபர் இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும்

துாத்துக்குடி விமான நிலையத்தில் புதிய முனையம் அக்டோபர் இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும்

துாத்துக்குடி விமான நிலையத்தில் புதிய முனையம் அக்டோபர் இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும்

ADDED : ஜூலை 04, 2024 09:51 PM


Google News
Latest Tamil News
துாத்துக்குடி:துாத்துக்குடி விமான நிலையத்தில் கூடுதல் விமான சேவையை கையாளும் வகையில் 227.33 கோடி மதிப்பில் புதிய முனையம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டன.

மொத்தம் 17,341 ச.மீ., பரப்பளவில் அமைக்கப்படும் புதிய முனையத்தில் விமானப் போக்குவரத்துக் கண்காணிப்பு, கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் அதைச்சார்ந்த அலுவலகக் கட்டடங்கள், தீயணைப்புத்துறை கட்டடங்கள் உள்ளிட்ட கட்டடங்களும் கட்டப்பட்டு வருகிறது.

துாத்துக்குடி -- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து விமான நிலைய புதிய முனையத்திற்கு செல்லும் வகையில் 1 கி.மீ., துாரத்திற்கு இணைப்புச் சாலை புனரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

புதிய முனையத்தில் புறப்பாடு பகுதியில் நான்கு வாயில்களும், 21 பயணியர் செக் இன் கவுன்டர்களும், 3 ஏரோ ப்ரிட்ஜ்களும், 2 வருகைக்கான கன்வேயர் பெல்ட்களும் அமைகின்றன.

மேலும், ஒரே நேரத்தில் 5 விமானங்கள் நிறுத்தும் வகையிலான வசதிகள், 500 பயணியர் வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகள், 2 வி.ஐ.பி., அறைகள், லிப்ட் வசதிகள், பயணியர் அதிகமாக வருகை தரும் நேரங்களில் 1 மணி நேரத்திற்கு 1,440 பயணியரை கையாளக்கூடிய வகையிலான வசதிகள், பயணியர் வருகை, புறப்பாடு, பயணியர் காத்திருப்பு அறைகள் போன்ற பகுதிகளில் புதிய அதிநவீன வசதிகளுடன் உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் புதிய முனையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

அந்த பணிகளை கலெக்டர் லட்சுமிபதி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

புதிய முனையம் நான்கு நட்சத்திர அந்தஸ்து பெற்ற பசுமை கட்டடமாக அமைக்கப்பட்டு வருகிறது. முனைய கட்டடங்கள் முழுவதும் சோலார் பொருத்தப்பட்டுள்ளது. தற்போதுவரை, 76 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு அக்டோபர் மாதத்திற்குள் செயல்பாட்டிற்கு வரவுள்ளது.

மேலும், புதிய முனையத்தில் 113.63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3,115 மீட்டர் நீளத்திற்கு விமான ஓடுதளம் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. தற்போது வரை, 93 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டு மீதமுள்ள பணிகள் இந்த மாதம் இறுதிக்குள் முடிவடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us