ADDED : ஜூலை 02, 2024 08:37 PM
துாத்துக்குடி:துாத்துக்குடி அருகேயுள்ள தெய்வச்செயல்புரம் வடக்கு காரசேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தொழிலாளி சண்முகம், 65. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த விவசாயி ஆறுமுகம், 65, என்பவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்தது.
இந்நிலையில்,2018ம் ஆண்டு சண்முகம், அவரது மனைவி செல்லம்மாள், 60, மகள் சண்முகசுந்தரி, 35, ஆகியோர் வீட்டின் வாசலில் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு வந்த ஆறுமுகம், மறைத்து வைத்து இருந்த அரிவாளால் சண்முகத்தை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடி விட்டார்.
பலத்த காயமடைந்த சண்முகம் துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஆறு நாட்கள் கழித்து உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த முறப்பநாடு போலீசார் ஆறுமுகத்தை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை, துாத்துக்குடி இரண்டாவது கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி உதயவேலவன் குற்றம் சாட்டப்பட்ட ஆறுமுகத்துக்கு ஆயுள் தண்டனை மற்றும் 11,000 ரூபாய் அபராதம் விதித்தார். இதையடுத்து, ஆறுமுகம் பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.