ADDED : மே 22, 2025 02:07 AM

மப்பேடு:கடம்பத்துார் ஒன்றியம் மப்பேடு ஊராட்சியில் சமுதாயக்கூடம் இல்லாததால், அப்பகுதிவாசிகள் தனியார் மண்டபங்களுக்கு செல்லும் நிலை இருந்து வந்தது. இதனால், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தினர் கடும் சிரமப்பட்டு வந்தனர்.
இதையடுத்து, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் கீழ், சமூக பொறுப்பு உட்கட்டமைப்பு திட்டம் 2018 - 19ன் படி, 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சமுதாய கூடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
மப்பேடு சிவன் கோவில் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு, 2020ல் ஆண்டு பணிகள் துவங்கியது. ஐந்து ஆண்டுகளாக நடந்து வந்த சமுதாய கூடம் கட்டுமான பணி, கடந்த மாதம் தான் நிறைவு பெற்றது. ஆனால், தற்போது வரை சமுதாய கூடம் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே கிடக்கிறது.
எனவே, மப்பேடு ஊராட்சியில் கட்டி முடிக்கப்பட்ட சமுதாயக் கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.