Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/பொதட்டூர்பேட்டையில் நெசவாளர்கள் போராட்டம்... விடிய, விடிய !: 12 ஆண்டுகள் பிரச்னைக்கு தீர்வு எப்போது?

பொதட்டூர்பேட்டையில் நெசவாளர்கள் போராட்டம்... விடிய, விடிய !: 12 ஆண்டுகள் பிரச்னைக்கு தீர்வு எப்போது?

பொதட்டூர்பேட்டையில் நெசவாளர்கள் போராட்டம்... விடிய, விடிய !: 12 ஆண்டுகள் பிரச்னைக்கு தீர்வு எப்போது?

பொதட்டூர்பேட்டையில் நெசவாளர்கள் போராட்டம்... விடிய, விடிய !: 12 ஆண்டுகள் பிரச்னைக்கு தீர்வு எப்போது?

UPDATED : பிப் 24, 2024 12:29 AMADDED : பிப் 23, 2024 10:37 PM


Google News
Latest Tamil News
நெசவாளர்களின் கூலி உயர்வு பிரச்னைக்கு தீர்வு ஏற்படாததால், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கைத்தறி துறை அமைச்சர் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக இருந்தும் நெசவாளர்களின் பிரச்னைக்கு தீர்வு இல்லாததால் அவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டை, அம்மையார்குப்பம், மத்துார், புச்சிரெட்டிபள்ளி, ஸ்ரீகாளிகாபுரம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில், பாரம்பரியமாக விசைத்தறி நெசவு தொழில் நடந்து வருகிறது.

சுமூக தீர்வு


ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர், இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், தறி உரிமையாளர்கள், தறி ஓட்டுனர்கள், பாவு ஓட்டுனர்கள், நுாலுக்கு பசை சேர்ப்பவர்கள் என பல தரப்பினரும் ஈடுபட்டுள்ளனர்.

விசைத்தறி உரிமையாளர்கள், உள்ளூர் முகவர்களிடம் இருந்து பாவு மற்றும் ஊடை நுால் பெற்று, துணியாக நெய்து கூலி பெறுகின்றனர்.

அந்த கூலியை தறி ஓட்டுவோருக்கு பகிர்ந்து அளித்து வருகின்றனர். திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை தாலுகாவில், அதிகளவில் லுங்கி ரகம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த லுங்கி ரகங்களில் மொத்த விற்பனையாளர்கள் சென்னை மண்ணடியில் உள்ளனர்.

இந்நிலையில், விசைத்தறி உரிமையாளர்களுக்கு போதிய கூலி உயர்வு இல்லை என, கடந்த 12 ஆண்டுகளாக நெசவாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த கோரி, அறிஞர் அண்ணா நெசவாளர் முன்னேற்ற சங்கம் சார்பில், கடந்த 14 மற்றும் 19ம் தேதி திருத்தணி கோட்டாட்சியர் தீபா தலைமையில் பேச்சு நடத்தப்பட்டது.

சுமுக தீர்வு


அந்த கூட்டத்தின் போது, தற்போது வழங்கப்படும் கூலியுடன் மீட்டருக்கு, 10 ரூபாய் உயர்த்தி வழங்க நெசவாளர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதற்கு உள்ளூர் முகவர்கள், மீட்டருக்கு 1 ரூபாய் உயர்த்தி வழங்குவதாக தெரிவித்தனர்.

சுமுக தீர்வு எட்டப்படாத நிலையில், நெசவாளர்கள் நேற்று முன்தினம் 22ம் தேதி காலை நுாற்றுக்ணக்கானோர், திருத்தணி கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மூன்றாம் கட்ட பேச்சுக்காக குவிந்தனர்.

இந்த கூட்டத்தில், நெசவாளர்களுடன், ராணிப்பேட்டை, வேலுார் மாவட்ட உள்ளூர் முகவர்களும், சென்னையை சேர்ந்த துணி நுால் உற்பத்தியாளர்களும் பங்கேற்றனர்.

மீட்டருக்கு, 10 ரூபாய் கூலி உயர்வு கோரிய நெசவாளர்கள் 7 ரூபாய் உயர்த்தினால், வேலை நிறுத்தத்தை கைவிட்டு, நெசவு பணிக்கு திரும்புவதாக தெரிவித்தனர்.

ஆனால், உள்ளூர் முகவர்கள், 2 ரூபாய் உயர்த்துவதாக தெரிவித்தனர். இதில் தீர்வு எட்டப்படாத நிலையில் நேற்று முன்தினம் மாலை 6:00 மணி வரை நெசவாளர்கள், திருத்தணி கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அதிருப்தியுடன் காத்திருந்தனர்.

கூலி உயர்வு


பின், பொதட்டூர்பேட்டைக்கு திரும்பிய நெசவாளர்கள், பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கில் ஒன்று கூடினர். தங்களின் கூலி உயர்வு குறித்த ஆதங்கத்தை, வெளிப்படுத்தினர். இதில், 1,000த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

குறிப்பாக பெண் நெசவாளர்கள் தங்களின் வேதனையை வெளிப்படுத்தினர். நள்ளிரவை தாண்டியும் இந்த கூட்டம் தொடர்ந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருத்தணி கோட்டாட்சியர் தீபா, நெசவாளர்களை சமரசம் செய்து கலைந்து போக செய்தார்.

அதை தொடர்ந்து, நேற்று காலை, அறிஞர் அண்ணா நெசவாளர் முன்னேற்ற சங்கத்தினர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பொதட்டூர்பேட்டை அகத்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் கூடி விவாதித்தனர். மாவட்ட நிர்வாகத்திடம் முறையீடு செய்வது என தீர்மானம் நிறைவேற்றினர். நெசவாளர்கள் கடந்த மூன்று வாரங்களாக தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகின்றனர். கூலி உயர்வு விவகாரத்தில் அதிகாரிகள் விரைந்து தீர்வு காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

3 பேர் மீது வழக்கு


கைத்தறி துறை அமைச்சர் காந்தி, திருவள்ளூர் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக இருந்தும் நெசவாளர்களின் பிரச்னையை தீர்க்கவில்லை என, ஆதங்கப்படுகின்றனர்.

விசைத்தறி நெசவாளர்கள் மற்றும் கம்பெனி உரிமையாளர்கள் இடையே கூலி உயர்வு தொடர்பாக, சமரச பேச்சு நேற்று முன்தினம் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா, டி.எஸ்.பி., விக்னேஷ் மற்றும் தொழிலாளர் நல வாரிய அலுவலர்கள் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

அப்போது, ஆர்.டி.ஓ., தீபா, கோரிக்கை கேட்கும் போது, விசைத்தறி நெசவாளர்கள் தரப்பில் கலாம் விஜயன் என்பவர், திடீரென, சில ஆவணங்களை ஆர்.டி.ஓ., மேஜையின் மீது வீசி அச்சுறுத்தும் வகையில் பேசினார். இது குறித்து திருத்தணி தாசில்தார் மதன், கலாம் விஜயன் மீது திருத்தணி போலீசில் புகார் கொடுத்தார்.

அதே போல், நெசவாளர்கள் சமரச கூட்டம் முடிந்து, இரண்டு மணி நேரம், ஆகியும் 200 ஆண்கள், 70 பெண்கள் ஆகியோர் கலைந்து செல்லாமல் ஆர்.டி.ஓ.,அலுவலகம் முன் அமர்ந்து, போராட்டம் நடத்தினர்.

இது குறித்து பட்டாபிராமபுரம் கிராம நிர்வாக அலுவலர் செல்வம், நெசவாளர்களை போராட்டத்திற்கு துாண்டியதாக, தனுஷ் மற்றும் மோகன் ஆகியோர் மீது திருத்தணி போலீசில் புகார் கொடுத்தார். திருத்தணி போலீசார் மூவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மின் கட்டணம் குறைப்பு


ஆந்திர மாநிலத்தில், அடிக்கடி மின்கட்டண உயர்வால் விசைத்தறி நெசவாளர்கள் கடும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து நகரி சட்டசபை தொகுதியில் உள்ள, 25,000த்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள், மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் என ஆந்திர மாநில அமைச்சர் ரோஜாவிடம் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து அமைச்சர் ரோஜா, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டியிடம் கோரிக்கை குறித்தும், மின்கட்டணம் குறைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். உடனடியாக, மின்கட்டணம் ஒரு ரூபாயில், 6 பைசா குறைக்கப்பட்டது. 1 யூனிட்டுக்கு 0.94 பைசாவாக மின்கட்டணம் கணக்கிடப்படும் என தலைமை செயலர் அறிவித்து, அதற்கான ஆணையும் பிறப்பித்தார். இதனால் நெசவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us