Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சோழவரம் நீர்த்தேக்கத்தில் சீரமைப்பு பணி இறுதிக்கட்டம் புழல் ஏரிக்கு செல்லும் பேபி கால்வாய் படுமோசம்

சோழவரம் நீர்த்தேக்கத்தில் சீரமைப்பு பணி இறுதிக்கட்டம் புழல் ஏரிக்கு செல்லும் பேபி கால்வாய் படுமோசம்

சோழவரம் நீர்த்தேக்கத்தில் சீரமைப்பு பணி இறுதிக்கட்டம் புழல் ஏரிக்கு செல்லும் பேபி கால்வாய் படுமோசம்

சோழவரம் நீர்த்தேக்கத்தில் சீரமைப்பு பணி இறுதிக்கட்டம் புழல் ஏரிக்கு செல்லும் பேபி கால்வாய் படுமோசம்

ADDED : செப் 14, 2025 11:21 PM


Google News
Latest Tamil News
சோழவரம்;சோழவரம் நீர்தேக்கத்தில், 40 கோடி ரூபாய் செலவில் நவீன தொழில்நுட்ப கட்டமைப்புகளுடன் கரை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அப்பணிகள் இறுதிகட்டத்தை அடைந்துள்ள நிலையில், புழல் ஏரிக்கு செல்லும் கால்வாய் மற்றும் ஷட்டர்கள் உள்ள பகுதிகள் பராமரிப்பு இன்றி இருப்பதால், மழைநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான சோழவரம் ஏரி, 1.08 டி.எம்.சி., கொள்ளளவு உடையது.

முழு கொள்ளளவு இங்குள்ள கரைகள் அடிக்கடி சேதமடைந்து, மண் சரிவு ஏற்பட்டு வந்ததை தொடர்ந்து, மத்திய - மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் நீரியியல் வல்லுனர்களின் பரிந்துரையின்படி, சோழவரம் ஏரியின் கரை சீரமைப்பு பணிகளுக்கு, தமிழக அரசு 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.

மொத்தம் 3.5 கி.மீ., நீளம் கொண்ட ஏரியின் கரையில், அதிக பாதிப்புள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு, அதில், 1.04 கி.மீ.,க்கு சீரமைப்பு பணி கடந்தாண்டு துவங்கப்பட்டது.

கரையில், 6 மீ., உயரத்தில் கான்கிரீட் சுவரும், அதிலிருந்து 30 மீட்டர் சரிவில் பாறை கற்களும் பதிக்கப்பட்டன.

கீழ்பகுதியில் தண்ணீர் தேங்கும் இடங்களில் நீர்க்கசிவு ஏற்பட்டு, கரை பலவீனமடைவதை தடுக்க, நவீன தொழில்நுட்பமான, 'டி - வால்' எனப்படும் நீர்க்கசிவு தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது.

மேலும், கரையின் மேல்பகுதியில், 1 மீ., உயரத்தில் அலை தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு உள்ளது. இது, ஏரியில் நீர் இருப்பு அதிகரிக்கும் போது ஏற்படும் அலையால், மண் அரிப்பு ஏற்படுவதை தடுக்க மேற்கொள்ளப்பட்ட புதிய கட்டுமான முயற்சி.

இவ்வாறு ஏரியின் கரைகள் பலப்படுத்தப்பட்டு உள்ளதுடன், தற்போது கரையின் மேற்பகுதியில் நீர்வளத்துறையினர் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக சாலை அமைக்கப்படுகிறது. கரை சீரமைப்பு பணிகளுக்காக, கடந்தாண்டு குறைந்த அளவில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது.

தற்போது, பணிகள் இறுதிகட்டத்தை அடைந்துள்ள நிலையில், நடப்பாண்டு முழு கொள்ளளவிற்கு தண்ணீர் தேக்கி வைக்க நீர்வளத்துறை திட்டமிட்டு உள்ளது.

சோழவரம் ஏரியில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர், 4 கி.மீ., தொலைவில் உள்ள புழல் ஏரிக்கு கொண்டு செல்லப்படுகிறது. தற்போது, சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரி வரை செல்லும் பேபி கால்வாய் உரிய பராமரிப்பு இன்றி உள்ளது.

நல்லுார், ஆட்டந்தாங்கள், விஜயநல்லுார் உள்ளிட்ட பகுதிகளில் கால்வாய் கரைகளின் இருபுறமும் செடிகள் வளர்ந்தும், ஆக்கிரமிப்புகளிலும் சிக்கியுள்ளது.

கால்வாயின் பல்வேறு இடங்களில் ஆகாயத் தாமரை வளர்ந்தும், குப்பை கழிவுகள் குவிந்தும் உள்ளன.

அதேபோல், சோழவரம் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேற்றுவதற்காக பொருத்தப்பட்டுள்ள ஷட்டர்கள் உள்ள பகுதியும் பராமரிப்பு இன்றி உள்ளது. மேலும், ஷட்டர்கள் துருப்பிடித்தும், கான்கிரீட் கட்டுமானங்களில் செடிகள் வளர்ந்தும் உள்ளன.

ஷட்டர்கள் மற்றும் கால்வாய் பராமரிப்பு இன்றி இருப்பதால், சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு மழைநீர் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

கோடைக்காலத்தில் புழல் ஏரியில் நீர் இருப்பு படிப்படியாக குறையும்போது, சோழவரம் ஏரியின் தண்ணீர் பேபி கால்வாய் வழியாக கொண்டு சென்று, சென்னையின் குடிநீர் தேவைக்கு பயன் படுத்தப்படுகிறது.

நடவடிக்கை கால்வாய் மற்றும் ஷட்டர் பகுதிகள் பராமரிப்பு இன்றி இருப்பதால், புழல் ஏரிக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், கால்வாயில் வெளிக்கழிவுகள் கலப்பதால், தண்ணீர் மாசடைகிறது.

சோழவரம் ஏரியின் கரைகளை சீரமைத்ததை போல், வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில், போர்க்கால நடவடிக்கையாக, இங்கிருந்து புழல் ஏரிக்கு செல்லும் பேபிகால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கரைகளை பலப்படுத்தி சீரமைக்க வேண்டும்.

சோழவரம் ஏரியின் ஷட்டர்களை புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us